ஆமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலின் 'க்ளைமேக்ஸ்' நெருங்கிவிட்டது. இரண்டாம் மற்றும் இறுதி கட்டமாக, 93 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதற்காக ஒரு மாதத்துக்கு மேலாக நடந்து வந்த அனல் வீசிய தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில், 8ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.
பா.ஜ., ஆளும் ஹிமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஹிமாச்சல பிரதேசத்தில், கடந்த மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.
இந்த மாநிலத்தில், கடந்த, 25 ஆண்டுகளில் எந்தக் கட்சியும் தொடர்ந்து இருமுறை ஆட்சியைப் பிடித்ததில்லை. முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ள குஜராத்தில், இரண்டு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.
![]()
|
ஆமதாபாத், வதோதரா, காந்தி நகர் உட்பட வடக்கு மற்றும் மத்திய குஜராத்தின், 14 மாவட்டங்களில், நாளை இரண்டாம் கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. மொத்தமுள்ள, 95 தொகுதிகளில், 833 பேர் போட்டியிடுகின்றனர்.
தீவிரம்
இந்த இரு மாநில தேர்தல்களின் ஓட்டு எண்ணிக்கை, ௮ம் தேதி நடக்க உள்ளது. இந்த முடிவு கள், 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலம் என்பதால், குஜராத்தில் மீண்டும் வெற்றி பெறுவது பா.ஜ.,வுக்கு கவுரவ பிரச்னையாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சியில் உள்ள பா.ஜ., தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றி பெறுவதில்
தீவிரமாக உள்ளது.
பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இங்கு காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. இருப்பினும், புதுடில்லி மற்றும் பஞ்சாபை தொடர்ந்து குஜராத்திலும் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது.
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், புதுடில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர்களான சோனியா மற்றும் ராகுல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.
உடல்நிலை காரணத்தால் சோனியாவும், பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள தால் ராகுலும் இங்கு பிரசாரம் செய்யவில்லை. இவருடைய சகோதரியும், பொதுச் செயலருமான பிரியங்கா சில கூட்டங்களில் பங்கேற்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் பெரும்பாலானோர் ராகுலுடன் யாத்திரையில் உள்ளனர். இதனால், மாநில நிர்வாகிகளே பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
தகுதி
நாளை நடக்கும் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்தத் தேர்தலில், 2.56 கோடி பேர் ஓட்டளிக்க தகுதி பெற்று உள்ளனர்.
இதற்காக, 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, 39 ஆயிரம் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். மாநில போலீசாருடன், மத்திய துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில்
ஈடுபட உள்ளனர்.
Advertisement