வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் பெயரில், 'வாட்ஸ் ஆப்'பில் தகவல் அனுப்பி, அமைச்சரிடம் மோசடி செய்ய முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுச்சேரி, போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா. இவரது மொபைல் போனிற்கு, அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து கடந்த 30ல் 'வாட்ஸ் ஆப்'பில் தகவல் வந்தது. அதில், கவர்னர் தமிழிசை படம் இருந்தது. அந்த தகவலில், 'அமேசான் கூப்பனை ரீசார்ஜ் செய்தால் சலுகைகள் கிடைக்கும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜவகர் ஆகியோருக்கு இது போல, கவர்னர் பெயரில் தகவல் அனுப்பி, பண மோசடி செய்ய முயன்ற சம்பவம் நடந்தது.
இதனால், சந்தேகமடைந்த அமைச்சர் சந்திரபிரியங்கா, கவர்னர் அலுவலகத்தை தொடர்பு கொண்டார். அதில், கவர்னர் அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் அனுப்பவில்லை எனத் தெரிந்தது.
தொடர்ந்து, அமைச்சர் சந்திரபிரியங்கா, சைபர் கிரைம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன் படி, இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடுகின்றனர்.