புவனகிரி-புவனகிரி அருகே வெள்ளாற்று பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
புவனகிரி அடுத்த அழிச்சிகுடி, வெள்ளாற்றுப் பகுதியில் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான 5 ஏக்கர் இடத்தை, அப்பகுதியைச் சேர்ந்த பலர் ஆக்கிரமித்து நெல், கரும்பு, முல்லை அரும்பு, மரவள்ளி சாகுபடி செய்திருந்தனர்.
இதையடுத்து, பொதுப்பணி அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட்டில் தானாக முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளுமாறு ஆக்கிரமிப்பாளர்களிடம் நோட்டீஸ் கொடுத்தனர். அதனை பொருட்படுத்தாமல் மீண்டும் சாகுபடி பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பொதுப்பணித்துறையினர் கடந்த இரு தினங்களாக முறைப்படி, ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.
நேற்று காலை புவனகிரி போலீசார் பாதுகாப்புடன் வருவாய் அலுவலர் ஜான்பிரிட்டோ உள்ளிட்ட வருவாய்த்துறையினர், பொதுப் பணித்துறைக்கான கணக்கின்படி உதவிப்பொறியாளர் கவுதமன், தொழில் நுட்ப பணியாளர்கள் குமார், ராஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் பொக்லைன் மற்றும் டிராக்டர் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆயத்தமாகினர்.
அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் குடும்பத்துடன் திரண்டு, இரண்டு மாதம் அவகாசம் கேட்டனர். அதற்கு அதிகாரிகள் இரண்டு முறை எச்சரிக்கை நோட்டீஸ் அளித்தும் நீங்கள் கண்டுகொள்ளவில்லை. இனி அவகாசம் அளிக்க முடியாது எனக்கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்றும் தொடர்கிறது.