வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர் : பஞ்சாபிலுள்ள நம் எல்லைப் பகுதியில், பாகிஸ்தானிலிருந்து 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா விமானம் வழியாக வீசப்பட்ட 25 கிலோ 'ஹெராயின்' போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தும் முயற்சியை, எல்லைப் பாதுகாப்புப் படையினர் நேற்று முறியடித்தனர்.
பஞ்சாபில், பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, பசில்கா மாவட்டத்திலுள்ள சுரிவாலா சுஸ்தி கிராமத்தில், நேற்று முன்தினம் எல்லை பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவில், அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்து, ட்ரோன் ஒன்று நம் எல்லைக்குள் நுழைவதை கண்காணித்து விமானத்தை நோக்கி சுட்டனர். இதில் தப்பிய ட்ரோன், பாகிஸ்தான் பகுதிக்கு திரும்பியது.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். இதில், 7.5 கிலோ எடையுள்ள ஒன்பது ஹெராயின் பாக்கெட்டுகள், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வீசப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில், சற்று தள்ளி 17.5 கிலோ எடையுள்ள ஏழு ஹெராயின் பாக்கெட்டுகள் கண்டெடுக்கப் பட்டன.
இந்தப் பகுதியை தொடர்ந்து கண்காணித்த போது, ட்ரோன் வாயிலாக வீசப்பட்ட போதைப் பொருட்களை மீட்க வந்த நான்கு நபர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால், அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
இதற்கு முன்னதாக பாக்.,கில் இருந்து வந்த மூன்று ட்ரோன்கள் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டு, 12 கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement