சென்னை: ''பெண்களுக்கு வழங்குவதாக அறிவித்த, மாத உரிமைத் தொகையை, இந்த ஆண்டு இல்லையென்றாலும், அடுத்த ஆண்டு நிச்சயம் முதல்வர் வழங்குவார்,'' என, சபாநாயகர் அப்பாவு கூறினார்.
சென்னையில் நேற்று முன்தினம், 13வது உலகத் தமிழ் ஆசிரியர்கள் மாநாடு நடந்தது. உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சபாநாயகர் அப்பாவு ஆகியோர், மாநாட்டை துவக்கி வைத்தனர்.
சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:
பெண்கள் படித்தால்தான் சமுதாயம் முன்னேறும் என்பதை உணர்ந்த முதல்வர், அவர்கள் படிக்க, உதவித்தொகை வழங்குகிறார். 'புதுமைப் பெண்' திட்டம் வழியாக, அரசு பள்ளிகளில் படித்து, பட்டப்படிப்பு படிக்கும் பெண்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் வழங்குகிறார்.
கடந்த 10 ஆண்டுகளில், கஜானாவில் ஒன்றும் இல்லை. பல லட்சம் கோடி ரூபாய் கடன். பல ஆயிரம் கோடி ரூபாய், ஆண்டுதோறும் வட்டி கட்ட வேண்டிய நிலை.
ஒவ்வொரு துறையாக பார்த்து, முதல்வர் வருமானத்தை பெருக்கி வருகிறார். 'ரேஷன் கார்டுதாரர்களில் பெண் ஒருவருக்கு உரிமைத் தொகையாக, 1,000 ரூபாய் தருகிறேன்' என, முதல்வர் தெரிவித்திருந்தார்.
சாமானிய மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த ஆண்டு இல்லை என்றாலும், அடுத்த ஆண்டு கொடுப்பதாக, முதல்வர் உறுதி அளித்துள்ளார்; நிச்சயம் கொடுப்பார்.
இவ்வாறு அப்பாவு பேசினார்.
அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
புதிய கல்விக் கொள்கை திட்டத்தை, நாம் ஏற்கவில்லை. மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்பில் பொதுத் தேர்வு என, புதிய கல்விக் கொள்கையில் கூறுகின்றனர்.
இதைச் செய்தால் இடைநிற்றல் அதிகமாகும். இதைத் தான் வேண்டாம் என்கிறோம்.
தமிழகத்தில் கல்வி வளர்ச்சி ஏற்பட வேண்டும். இதற்காக குழு அமைத்துள்ளோம். அக்குழுவிடம் உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அண்ணாதுரை கொண்டு வந்த இரு மொழி கொள்கையான, ஆங்கிலம், தமிழ் மொழி போதும்.
இவ்வாறு அவர் பேசினார்.