சென்னை: சென்னையில் 25 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வரி பாக்கி வைத்துள்ள 39 பேரின் பட்டியலை, மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இவர்கள், சொத்து வரி செலுத்தாமல் 24.17 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளனர். சென்னை மாநகராட்சி, வரி வருவாயில் பிரதானமானது சொத்து வரி மற்றும் தொழில் வரியாகும்.

இந்த வருவாய் வாயிலாக, துாய்மை பணிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள், நோய் தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநகராட்சி மேற்கொள்கிறது.
சென்னையில் பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சொத்து வரி, தெரு கட்டண அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சொத்து வரி இரண்டு மடங்காக உயர்ந்ததாக, சொத்து உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டினர்.
சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் - 1919 பிரிவு 104ன்படி, ஒவ்வொரு அரையாண்டு துவக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்தப்பட வேண்டும். பின், காலம் தாழ்த்தி சொத்து வரி செலுத்தப்படும்பட்சத்தில், செலுத்த வேண்டிய தொகையுடன் 2 சதவீத தனி வட்டி சேர்த்து செலுத்த வேண்டும்.
சொத்து வரி உயர்வு காரணமாக, 2022 - 23ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் டிச., 15ம் தேதி வரை, தனி வட்டி இல்லாமல் சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், பல ஆண்டுகளாக சொத்துவரி பாக்கி வைத்திருக்கும் பெருநிறுவனங்களுக்கு, அவ்வப்போது 'நோட்டீஸ்' வழங்கி வருகிறது. அவ்வாறு நோட்டீஸ் வழங்கினாலும் அவற்றை அலட்சியப்படுத்தி, 25 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வரி செலுத்தாமல் இருக்கும் பெரு நிறுவனங்கள் குறித்த பட்டியலை, முதன் முறையாக, சென்னை மாநகராட்சி பொது வெளியில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, சொத்துவரி பாக்கி வைத்துள்ள 39 பெரு நிறுவனங்கள் மற்றும் தனிநபர் அடங்கிய பட்டியலை https://chennaicorporation.gov.in/gcc/pdf/Defaulter_List.pdf என்ற தளத்தில் மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இது குறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில், சொத்து வரி நிலுவை இல்லாமல் வசூலிக்க, தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 25 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வரி பாக்கி வைத்திருப்போர் குறித்த பட்டியலை வெளியிட்டு உள்ளோம்.
இவர்கள் சொத்து வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தினால், 'சீல்' வைக்க மாநகராட்சி தயங்காது. அதேபோல், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்துவரி பாக்கி வைத்திருப்போர் பட்டியலை தயாரித்து வருகிறோம். அவர்கள் குறித்த பட்டியலையும் மாநகராட்சி வெளியிட தயாராக உள்ளது.
எனவே, சொத்து உரிமையாளர்கள், சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.