கடலுார்-கடலுாரில் சுகாதாரத் துறை நுாற்றாண்டு விழா போட்டிகளில் வென்ற பணியாளர்களுக்கு கலெக்டர் பாலசுப்ரமணியம், அய்யப்பன் எம்.எல்.ஏ., பரிசு வழங்கினர்.
தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறையின் நுாற்றாண்டு விழா ஜோதி விழுப்புரத்தில் இருந்து கடலுாருக்கு கொண்டு வரப்பட்டது. சில்வர் பீச்சில் நடந்த விழாவில், கலெக்டர் பாலசுப்ரமணியம், ஜோதியை பெற்றுக் கொண்டார். பின், பொது சுகாதாரத் துறை மற்றும் கடலுார் மாவட்டத்தின் சிறப்புகள் அடங்கிய மணல் சிற்பத்தை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, ஜான்கிட் திருமண மண்டபத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வென்ற சுகாதார பணியாளர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மீரா வரவேற்றார். கலெக்டர் பாலசுப்ரமணியம், அய்யப்பன் எம்.எல்.ஏ., ஆகியோர் போட்டிகளில் வென்ற சுகாதாரப் பணியாளர்களுக்கும், மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசு வழங்கி பேசினர். விழாவில், நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.