'ஆன்லைன் ரம்மி'க்கு தடை விதித்து, தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம் காலாவதியாகி விட்டது. சூதாட்டம் நடத்துவோர் மீது, அந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தால் பணம் இழந்து, தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
'ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தொடர்பாக, தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது; பின், கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
கவர்னருக்கு பா.ஜ., ஆதரவு
'கவர்னர் காலதாமதம் செய்ததால், சட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை. ஆன்லைன் சூதாட்டம் வாயிலாக நடக்கும் மரணங்களுக்கு, அவர்தான் பொறுப்பேற்க வேண்டும்' என, தி.மு.க., தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர்.கவர்னர் செயல்பாட்டுக்கு ஆதரவாக, குரல் எழுப்பும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'அவசர சட்டம் இயற்றி, அதற்கு கவர்னர் ஒப்புதலை பெற்ற அரசு, உடனடியாக அரசாணை இயற்றி, அதை அரசிதழில் வெளியிடவில்லை. 'அதனாலேயே சட்டத்துக்கு உயிர் இல்லாமல்போய் விட்டது.சட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதற்கு, இந்த தவறே காரணம்' என, கூறி வருகிறார்.

இந்த விஷயத்தில் என்ன தான் நடக்கிறது என்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்மணி கூறியதாவது: ஆன்லைன் வாயிலாக ரம்மி விளையாடுவது என்பது சூதாட்டமா அல்லது விளையாட்டா என்பதுதான் கேள்வி.இது, விளையாட்டு தான் என்கிறது சட்டம். இதன் வாயிலாக பலர் பணத்தை இழந்து, கடனாளி ஆகி இறந்து போய் உள்ளனர் என்பதெல்லாம் உண்மை.நுாறு பஸ்களை இயக்கும்போது, அதில் இரண்டு பஸ் விபத்தை சந்திக்கலாம்; அதற்காக பஸ் போக்குவரத்தை நிறுத்த முடியாது.ரம்மி விளையாட்டு சூதாட்டமா என்ற பிரச்னை, உலகம் முழுக்க உள்ளது. உலகின் பெரிய நீதிமன்றங்களும், இந்த விவகாரம் குறித்து விவாதித்துள்ளன. ஆன்லைன் ரம்மி, திறமையை வைத்து விளையாடுவதா அல்லது அதிர்ஷ்டத்தை நம்பி விளையாடுவதா என பார்க்க வேண்டும். இது, திறமையை வைத்து விளையாடுவது என்றால் சரி. அதிர்ஷ்டத்தை வைத்து விளையாடுவது என்றால் தவறு. ஆன்லைனில் விளையாடுபவர்கள் மட்டுமே இறந்து போகின்றனர் என்ற வாதம் ஏற்புடையது அல்ல.
சூதாட்டம் அல்ல
'ஆப்லைனில்' அதாவது, நேரடியாக சூதாட்டம் ஆடுபவர்களிலும், ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர்.உடனடியாக பணம் பெற வேண்டும் என்ற எண்ணம், எல்லார் மனதிலும் உள்ளது. அதனால் தான் அதை உழைக்காமலேயே கிடைக்கும் பணம் என்கின்றனர். அதேநேரம், திறமையால் கிடைக்கும் பணம், ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆன்லைன் சூதாட்டத்தில், திறமையின் அடிப்படையில் பணம் கிடைப்பதாலேயே, அதை சட்டம் அனுமதிக்கிறது.
அரசியல் அமைப்பு சட்டம், ஏழாவது அட்டவணை, இரண்டாவது பட்டியலின் 34வது பிரிவில், 'பெட்டிங் கேம்ப்ளிங்' பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஒரு மாநில அரசு, எந்தெந்த விஷயங்களுக்கு சட்டம் இயற்றலாம் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. '34வது பிரிவில் சூதாட்டம் குறித்து சொல்லப்பட்டு இருப்பதால், அதற்கான சட்டம் இயற்றும் அதிகாரம் எங்களுக்கு உள்ளது' என, தமிழக அரசு சொல்கிறது.இதை அடிப்படையாக வைத்து தான், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடுக்க, அ.தி.மு.க., அரசு சட்டம் கொண்டு வந்தது. அதற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
விசாரணை முடிவில், 'ரம்மி விளையாட்டு சூதாட்டம் அல்ல; திறமையின் அடிப்படையில் விளையாடப்படும் விளையாட்டு தான்' என, உயர் நீதிமன்றம் கூறி விட்டது.மேலும், 'தமிழக அரசுக்கு, 34வது பிரிவின் கீழ் சட்டம் இயற்றும் அதிகாரம் இல்லை' என்றும் உயர் நீதிமன்றம் கூறியது. தமிழக அரசு கொண்டு வந்த தடை சட்டத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டது.இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது; வழக்கு நிலுவையில் உள்ளது.இந்த சூழலில் தான், தமிழகத்தில் புதிதாக பதவியேற்ற தி.மு.க., அரசும், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் முயற்சியில் களம் இறங்கியது.
அறிக்கை சமர்ப்பிப்பு
முந்தைய அரசு போட்ட சட்டமே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சட்டம் இயற்றுவதற்கு முன், சட்டம் என்ன கூறுகிறது என்பதை அறிய, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் கமிஷன் அமைத்து, அவரது யோசனைகளை கேட்டனர்.சட்ட ரீதியிலான விஷயங்களை, நீதிபதி சந்துரு, அறிக்கையாக சமர்ப்பித்தார்.
அதில், 'உயர் நீதிமன்றம் சொல்வது போல, அரசியல் சட்டம் ஏழாவது அட்டவணை, இரண்டாவது பட்டியலின் 34வது பிரிவில் கூறப்பட்டுள்ளதுபடி, மாநில அரசு, ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக புதிய சட்டத்தை கொண்டு வர முடியாது. அதற்கான அதிகாரமும் மாநில அரசுக்கு கிடையாது.'எனவே, மத்திய அரசை அணுகி, நாடு முழுதற்கும் இத்தகைய பிரச்னைகளை தீர்க்க, சட்டம் கொண்டு வர வலியுறுத்தலாம்' என, குறிப்பிட்டிருந்தார்.ஆனால், இந்த அறிக்கையை கண்டுகொள்ளாத தி.மு.க., அரசு, அரசியல் நெருக்கடிகளுக்கு அஞ்சி, அவசர அவசரமாக அமைச்சரவையை கூட்டி விவாதித்து, ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் அவசர சட்டத்தை இயற்றியது.அதை கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது; அதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்து விட்டார்.
ஆனால், இந்த அவசர சட்டத்துக்கு ஆறு மாத காலம் உயிர் இருக்க வேண்டும் என்றால், ஒப்புதல் அளிக்கப்பட்ட உடனேயே, அரசாணை இயற்றி, அதை அரசிதழில் வெளியிட்டிருக்க வேண்டும்.ஆனால், அரசு தரப்பில் அதை செய்யவில்லை. அதில் கவனம் செலுத்தாமல் மெத்தனமாக இருந்து விட்டனர் என்றே நினைக்கிறேன்.
வித்தியாசம் இல்லை
இது நடந்த சூழலில், சட்டசபை கூடியது. ஆன்லைன் ரம்மியை தடுக்கும் சட்ட மசோதாவை, அங்கு தாக்கல் செய்தனர். சபை ஒப்புதல் பெற்று, மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஆனால், கவனர் ஒப்புதல் அளிக்கவில்லை. 'மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் காலம் தாழ்த்துகிறார்' என, தி.மு.க., தரப்பில் விமர்சிக்கின்றனர்.ஏற்கனவே போட்ட அவசர சட்டத்தை காக்கும் விதமாக தமிழக அரசு, அரசாணை வெளியிடாததால், அவசர சட்டம் செல்லாததாகி விட்டது.ரம்மி விளையாட்டில் பணம் இழந்து, தற்கொலை செய்பவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதியை அழைத்து, மசோதாவில் இருக்கும் குறைபாடுகள் தொடர்பாக, கவர்னர் ரவி விளக்கம் கேட்டுள்ளார்.
கவர்னர் என்பவர், தமிழக அரசின் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் நபர் தான். அரசு அல்லது நீதிமன்றம் போன்று கவர்னர் செயல்பட முடியாது. ஏற்கனவே, அ.தி.மு.க., ஆட்சியில் போடப்பட்ட சட்டத்துக்கும், தற்போது தி.மு.க., அரசு அனுப்பி இருக்கும் மசோதாவுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை.ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என, இரு வழிகளிலும் நடக்கும் ரம்மி சூதாட்டத்தை தடுக்க, அ.தி.மு.க., அரசு சட்டம் கொண்டு வந்தது.
ரத்து செய்ய வாய்ப்பு
ஆனால், தி.மு.க., அரசோ, ஏற்கனவே போடப்பட்ட சட்டத்தில் இருந்து ஆப்லைனை எடுத்து விட்டு, வெறும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு மட்டும் தடை விதித்து, மசோதா இயற்றி, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி விட்டனர்.
என்ன தான் கவர்னர் அதிகாரம் படைத்தவராக இருந்தாலும், ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் கூறியதை சுட்டிக்காட்டி, தி.மு.க., அரசு அனுப்பிய சட்ட மசோதாவுக்கு, ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்.அப்படி செய்திருந்தால், மக்களுக்கு தேவையான சட்டத்தை கொண்டு வர, அரசோடு முரண்பட்டு, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார் என்ற கெட்ட பெயர், அவருக்கு ஏற்படாமல் இருந்திருக்கும்.மசோதாவின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி கவர்னர் ஒப்புதல் அளித்திருந்தாலும், அது நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் --