பாரிஸ்: எனது நண்பர் நரேந்திர மோடி உலகில் சமாதானத்தை உருவாக்குபவர் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் புகழாரம் சூட்டியுள்ளார்.

உலகின் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி - 20 கூட்டமைப்பின் மாநாடு, ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி நகரில், சமீபத்தில் நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷீ ஜிங்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார்.
ஜி - 20 அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு செப்., 9 மற்றும் 10ம் தேதிகளில், ஜி - 20 மாநாடு புதுடில்லியில் நடக்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியிடம், இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ மாநாட்டு தலைமை பொறுப்பை ஒப்படைத்தார்.
ஜி 20 மாநாட்டில் இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஜி - 20 அமைப்பை உலகமே நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைமிகு தருணம். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலம் மற்றும் நகரங்களில் ஜி - 20 கூட்டங்கள் நடத்தப்படும். ஜி - 20 அமைப்பு வாயிலாக இந்த உலகுக்கு உரக்க சொல்லப்படும். 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரு எதிர்காலம்' என்ற கருப்பொருளின் அடிப்படையில் அடுத்த மாநாட்டை இந்தியா நடத்தும் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

‛‛ பிரதமர் மோடி எனது நண்பர்'':
இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது நண்பர் நரேந்திர மோடி, 'உலகில் சமாதானத்தை உருவாக்கிட, அமைதியைக் கட்டியெழுப்ப இன்னும் நிலையான உலகைக் கொண்டு வந்திட எங்களை ஒன்றிணைப்பார்' என நம்புகிறேன். ஒரு பூமி. ஒரு குடும்பம். ஒரு எதிர்காலம். ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஓப்படை க்கப்பட்டது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.