புதுடில்லி: இந்திய கடற்படை தினத்தை யொட்டி, டில்லியில் அமைந்துள்ள தேசிய போர் நினைவிடத்தில், கடற்படை தலைவர் ஆர்.ஹரிகுமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இந்தியா- பாகிஸ்தான் போரின் போது அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் இந்திய கடற்படையின் வெற்றிகரமான நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் வகையில், 1972ஆம் ஆண்டு மே மாதம் நடந்த மூத்த கடற்படை அதிகாரிகள் மாநாட்டில், டிசம்பர் 4ஆம் தேதியை கடற்படை தினம் ஆக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ஆம் தேதியை கடற்படை தினமாக இந்தியா கொண்டாடுகிறது. இந்நிலையில், இந்திய கடற்படை தினத்தை யொட்டி, டில்லியில் அமைந்துள்ள தேசிய போர் நினைவிடத்தில், தியாகிகளுக்கு கடற்படை தலைவர் ஆர்.ஹரிகுமார், விமானப்படை தளபதி வி.ஆர்.சௌத்ரி, துணைராணுவ தளபதி பி.எஸ்.ராஜு ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படை வீரர்களுக்கு பிரதமர் மோடி, வெளியிட்ட அறிக்கை: இந்திய கடற்படை நமது நாட்டை பாதுகாத்து வருகிறது. சவாலான காலங்களில் இந்திய கடற்படை தனது மனிதாபிமான உணர்வால் தன்னை வேறுபடுத்திக் கொண்டுள்ளது.
அனைத்து கடற்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கடற்படை தின நல்வாழ்த்துக்கள். இந்தியாவில், நாம் நமது வளமான கடல் வரலாற்றில் பெருமை கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.