வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கடமையை நிறைவேற்ற முடியாதவர்கள், அடுத்தவருக்கு வழிவிட வேண்டும் என காங்., தலைவர் கார்கே கூறியுள்ளார்.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரை முன்னிட்டு, காங்., வழிகாட்டுதல் குழு கூட்டம் இன்று(டிச.,04) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், குளிர்கால கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள்,குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் தலைவர் சோனியா, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் காங்., தலைவர் கார்கே பேசியவதாவது: ராகுல் தலைமையில் நடைபெறும் யாத்திரை, வரலாற்றை எழுதுகிறது. இந்த யாத்திரை தற்போது தேசிய இயக்கமாக உருவெடுத்துள்ளது.

காங்கிரஸ் வலுவாகவும், பொறுப்பாகவும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டால் மட்டுமே, தேர்தலில் வெற்றி பெற்று நாட்டு மக்களுக்கு சேவை செய்ய முடியும். வெறுப்பின் விதைகளை விதைக்கும் மற்றும் பிரிவினையின் பலனை அறுவடை செய்யும் ஆளும் சக்திகளுக்கு எதிராகப் போராடுவது நமது கடமை.

கட்சியில் மிகவும் பொறுப்பான நபர்கள் தங்கள் கடமையைச் செய்து கொண்டிருந்தாலும், பொறுப்பில்லாத சிலரும் இருப்பதாக நினைக்கிறேன். இது சரியல்ல, ஏற்கத்தக்கது அல்ல, தங்கள் பொறுப்பை நிறைவேற்ற முடியாதவர்கள், தங்கள் சக ஊழியர்களுக்கு வழிவகை செய்ய வேண்டும்.
உயர்மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். கடமையை நிறைவேற்ற முடியாதவர்கள், அடுத்தவருக்கு வழிவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.