அன்னுார்:நுாறாண்டு வாழ்ந்து இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட பிரச்னையால், ஒரு தரப்பினர் ரோட்டின் நடுவில் சடலத்தை வைத்து விடிய, விடிய போராட்டம் நடத்தினர்.
காரேகவுண்டன்பாளையம் ஊராட்சி, ஒன்னக்கரசம்பாளையம் காலனியை சேர்ந்த ரங்கம்மாள், 102 என்பவர் நேற்று முன்தினம் காலை வயது மூப்பால் இறந்தார். மாலை, 6:00 மணிக்கு அவரது உடலை ஊரை ஒட்டி உள்ள பொது மயானம் அருகே புதைக்க சென்றனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து இறந்தவரின் உறவினர்கள் சாலையின் நடுவில் சடலத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில்,'எங்கள் தரப்பினருக்கான மயானம் இங்கிருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ளது. மேலும் மயானத்தின் அருகே பாலம் கட்டியதால் மயானம் மிகவும் குறுகலாகிவிட்டது. அங்கு மிகவும் இடைஞ்சலாக உள்ளது. எனவே ஊரை ஒட்டி உள்ள பொது மயானத்தில் புதைக்க அனுமதிக்க வேண்டும்,' என்றனர். ஆனால், மற்றொரு தரப்பினர் அனுமதிக்கவில்லை. இரு தரப்பினரும் பிடிவாதமாக இருந்ததால், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., பூமா, மாவட்ட கூடுதல் எஸ்.பி., ரவிச்சந்திரன், டி.எஸ்.பி.,க்கள் செல்வராஜ், பாலாஜி மற்றும் 60 போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து விடிய, விடிய போராட்டம் நடந்தது.
'இரண்டு மாதத்திற்குள் தனியாக ஒரு மயானம் அமைத்து தரப்படும். தற்போது இதுவரை வழக்கமாக புதைத்து வந்த இடத்திலேயே புதையுங்கள்' என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதை ஏற்று நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு இறந்தவரின் உடலை எடுத்துக்கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இதையடுத்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.