மேட்டுப்பாளையம்:வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும், மாற்று ரோடான உப்புப்பள்ளம் ரோட்டை சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து காட்டூர், மகாதேவபுரம், உப்புப்பள்ளம், நெல்லித்துறை ரோடு வழியாக வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் ரோடு உள்ளது. இக்கோவிலுக்கு வார நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் அமாவாசை நாட்களில், பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர்.
வேண்டுதலை நிறைவேற்ற, நுாற்றுக்கணக்கான பக்தர்கள், கோவில் வளாகத்தில் உள்ள, பக்காசூரன் சிலை அருகே கிடாய் வெட்டி, அங்குள்ள மண்டபங்களில் விருந்து போடுகின்றனர். இவ்விருந்தில் பங்கேற்க ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வருகின்றனர். அமாவாசை மற்றும் விடுமுறை நாட்களில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் வாகனங்களில் வருவதால், அடிக்கடி மேட்டுப்பாளையம் நெல்லித்துறை ரோட்டில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அப்போது, இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் காட்டூரில் இருந்து கெண்டையூர், ராமேகவுண்டன்புதுார், உப்புப்பள்ளம் ரோடு வழியாக வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்கின்றனர்.
தற்போது மகாதேவபுரம் பகுதியில், பாதாள சாக்கடை பணிகள் நடப்பதால், பல இடங்களில் ரோட்டில் குழி தோண்டி வைக்கப்பட்டுள்ளது. நெல்லித்துறை ரோட்டில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், கெண்டையூர், ராமேகவுண்டன்புதுார் ரோடு வழியாக வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்கின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், 'அதிகமான வாகனங்கள் வந்து செல்வதால், உப்புப்பள்ளத்தில் இருந்து, ராமேகவுண்டன்புதுார் வரை உள்ள ரோட்டில், பல இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளன.
மேலும், இந்த ரோடு மிகவும் சிறியதாக உள்ளதால், ரோட்டில் இரு பக்கம் வளர்ந்துள்ள செடிகளால், எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை.
இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. வனபத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, உப்புப்பள்ளம் ரோட்டை நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் சீரமைக்க வேண்டும்' என்றனர்.