பெ.நா.பாளையம்:வெள்ளக்கிணர் சமத்துவபுரத்தில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.
எஸ்.எஸ்.,குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளக்கிணர் சமத்துவபுரத்தில் பழுதடைந்துள்ள, 86 குடியிருப்புகள், மேல்நிலை தொட்டி, நுாலகம், சமுதாயக்கூடம், குழந்தைகள் நல மையம் ஆகியவை, 72 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில்,"மக்களிடையே ஜாதி, இன, மத மோதல் உருவாகக்கூடாது என்ற அடிப்படையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன. இதில், வீடு மற்றும் இடத்தை ஒதுக்கீடு பெற்றவர்கள், அதை விற்பனை செய்யக்கூடாது" என்றார். நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அரசு முதன்மை செயலர் அமுதா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையர் தாரேஸ் அகமது, கோவை கலெக்டர் சமீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.