சூலுார்:பட்டணம் கிராமத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் பணி துவங்கியுள்ளது.
சூலுார் வட்டாரத்தில், பட்டணம், மயிலம்பட்டி, பீடம்பள்ளி ஆகிய மூன்று கிராமங்களில் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது. இக்கிராமங்களில் தரிசு நிலங்களை கண்டறிந்து, விளை நிலங்களாக மாற்றுவது திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அதன்படி, பட்டணம் கிராமத்தில், தரிசு நிலங்கள் வைத்துள்ள, 14 விவசாயிகளை ஒருங்கிணைத்து குழு உருவாக்கப்பட்டது. அந்த தரிசு நிலங்களை, சாகுபடி நிலங்களாக மாற்ற தோட்டக்கலைத்துறை சார்பில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேளாண் பொறியியல் துறையுடன் இணைந்து, தரிசு நிலங்களில் இருந்த முட்புதர்கள் அகற்றும் பணி துவங்கியுள்ளது.
தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சித்ரா பானு, வேளாண் பொறியியல் துறை பொறியாளர் நிவேதா, உதவி அலுவலர் பசுபதி உள்ளிட்டோர் பணிகளை பார்வையிட்டனர். இத்திட்டத்தின் கீழ், குட்டைகளை துார் வாரி அகலப்படுத்துதல், சாலை அமைத்தல், மரக்கன்றுகள் நடவு செய்தல், நீர்நிலைகளை சீரமைத்தல், காய்கறி நாற்றுகள் வழங்குதல் ஆகியவற்றை செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.