'பா.ஜ., உடனான கூட்டணியை முறிக்கக் கூடாது; லோக்சபா தேர்தலிலும் தொடர வேண்டும்' என, அ.தி.மு.க., நிர்வாகிகள், இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமிக்கு கிடுக்கிப்பிடி போடுவதுடன், கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். 'ஜி - 20' கூட்டத்தில் பங்கேற்க, மத்திய அரசு விடுத்த அழைப்பை சாதகமாக்கிக் கொள்ளும்படியும், பா.ஜ., சொல்வது போல் செயல்படும்படியும் கூறுகின்றனர். அவர்கள் வழங்கிய அறிவுரையை ஏற்று, பழனிசாமி இன்று டில்லி செல்கிறார்.
உலக பொருளாதாரத்தில், முதன்மை சிக்கல்களைத் தீர்க்க, வளர்ச்சி அடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைப்பதற்காக, 'ஜி - 20' அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகிய, 20 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
தலைமை பொறுப்பு
ஆண்டுதோறும் அமைப்பில் உள்ள நாடுகளில், ஏதேனும் ஒரு நாடு தலைமை பொறுப்பை ஏற்கும். அந்த வகையில், கடந்த ஆண்டு ஜி - 20 உச்சி மாநாடுக்கான தலைமை பொறுப்பு, இந்தோனேஷியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இம்மாதம் 1ம் தேதி தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றது. ஓராண்டு இந்த பொறுப்பில் இந்தியா இருக்கும். அடுத்த ஆண்டு உச்சி மாநாடு, இந்தியாவில் நடத்தப்பட உள்ளது.
அத்துடன், நாடு முழுதும், 50 நகரங்களில், பல்வேறு துறைகளுடன் இணைந்து, ஜி - 20 அமைப்பு சார்பில் 200 கூட்டங்களை நடத்த இந்தியா திட்டமிட்டு உள்ளது.
இன்று ஆலோசனை
இதன் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு மார்ச் 6, 7ல், பீஹார் மாநிலம், பாட்னாவில், ஜி - 20 கூட்டம் நடக்க உள்ளது.
இந்த கூட்டத்தையும், உச்சி மாநாடையும் சிறப்பாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், இன்று மாலை 5:00 மணிக்கு டில்லியில் நடக்க உள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க, மாநில முதல்வர்கள் மற்றும் பார்லிமென்ட் எம்.பி.,க்கள் உள்ள கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டு உள்ளனர்.
அந்த வகையில், அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலராக உள்ள பழனிசாமிக்கும், அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனுப்பி உள்ள கடிதத்தில், அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி எனக் குறிப்பிட்டு இருப்பது, பழனிசாமி தரப்பினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதேநேரம், பா.ஜ., தலைமை, பழனிசாமி - பன்னீர்செல்வம் இணைந்து செயல்பட வலியுறுத்தி வருகிறது. இதற்கு பன்னீர்செல்வம் தயாராக இருந்தாலும், பழனிசாமி தயாராக இல்லை.
பா.ஜ., ஆதரவு தேவை
இருவரும் இணையும்படி, பா.ஜ., தலைமை கட்டாயப்படுத்தியதால், பா.ஜ., கூட்டணியை முறித்துக் கொள்ள பழனிசாமி தயாரானார். அதற்கேற்ப, அவரது தீவிர ஆதரவாளர்கள், பா.ஜ.,வை விமர்சிக்க துவங்கினர். இதை கட்சியின் மூத்த நிர்வாகிகள் விரும்பவில்லை.
'காங்., - தி.மு.க., கூட்டணி தொடரும் நிலையில், பா.ஜ., கூட்டணியில் நாம் தொடர வேண்டும். மாநிலத்தில் தி.மு.க., ஆட்சியில் உள்ள நிலையில், மத்தியில் பா.ஜ., ஆதரவு நமக்கு தேவை. எனவே, அக்கட்சியுடன் இணைந்து லோக்சபா தேர்தலை சந்திப்பதே நல்லது.
'பன்னீர்செல்வம் தனியே நிர்வாகிகளை நியமித்து வரும் நிலையில், கட்சி சின்னத்துக்கு சிக்கல் ஏற்படும். எனவே, பா.ஜ., தலைமை அறிவுரைப்படி இணைந்து செயல்படுவோம். பா.ஜ., கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டாம்' என, மூத்த நிர்வாகிகள், பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
'மத்திய அரசு ஜி - 20 தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு விடுத்துள்ள அழைப்பை சாதகமாக்கிக் கொள்ள வேண்டும். கூட்டத்தில் பங்கேற்று, பா.ஜ., கூட்டணியை உறுதி செய்ய வேண்டும்' எனவும், பழனிசாமிக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளனர்.
கட்சி மூத்த நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று, ஜி - 20 ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, பழனிசாமி இன்று டில்லி செல்வது உறுதியாகி உள்ளது.
பிரதமர் தலைமையில் இன்று டில்லியில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10:00 மணிக்கு, விமானத்தில் டில்லி செல்கிறார். அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி, காலை 11:20 மணி விமானத்தில் டில்லி செல்கிறார். கூட்டத்தில் முதல்வரும், பழனிசாமியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
- நமது நிருபர் -