கருணாநிதி பரம்பரைக்கே தகுதியில்லை!
என்.ராமகிருஷ்ணன், பழநி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: திருமண விழா ஒன்றில் பங்கேற்ற, தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி, மணமக்களை வாழ்த்துகையில், 'கருணாநிதியும், தமிழும் போல இணை பிரியாமல் இருங்கள். அ.தி.மு.க.,வின் பழனிசாமி, பன்னீர்செல்வம் போல, ஒற்றுமையின்றி இருக்காதீர்கள்' என்று கூறியுள்ளார்.
இது தான் மணமக்களை வாழ்த்தும் முறையா... கருணாநிதி தமிழை கற்றவர் இல்லை; அதை விற்றவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஏதோ கருணாநிதி தான், தமிழையே கண்டுபிடித்தவர் போல உதயநிதி பேசியுள்ளார்.
பன்னீர்செல்வமும், பழனிசாமியும் வேறு வேறு குடும்பத்தை சேர்ந்தவர்கள். அதேநேரத்தில், முதல்வர் ஸ்டாலினும், மு.க.அழகிரி யும் உடன்பிறந்த அண்ணன், தம்பியர்; பதவிக்காக அவர்கள் போட்ட சண்டையை பார்த்து, இந்த நாடே சிரித்தது. அழகிரியை கட்சியை விட்டும் நீக்கினார் கருணாநிதி.
முன்னாள் மத்திய அமைச்சர் மாறன் இறந்த போது, மு.க.முத்துவை வீட்டுக்குள்ளேயே விடாமல் விரட்டி அடித்தவர் ஸ்டாலின். இப்போதும், கனிமொழிக்கு அதிக முக்கி யத்துவம் தராமல், ஓரங்கட்டி தான் வைத்துள்ளார்.
கருணாநிதி குடும்பத்திற்குள் ஏற்பட்ட சண்டையால், மதுரையில் ஒரு பத்திரிகை அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டு, மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டனர். அதன்பின், அவர்களுக்குள் ஏற்பட்ட பூசல்கள், பெற வேண்டியதை பெற்றதும் மாறின. கண்கள் பனித்தன; இதயங்கள் இனித்தன.
மணமக்களை வாழ்த்தக் கூடிய வயதும், தகுதியும், உதயநிதிக்கு சிறிதளவும் இல்லை. அதிலும், ஒற்றுமையை பற்றி பேச, கருணாநிதி பரம்பரைக்கே தகுதி இல்லை!
அழுது புலம்புவதில் பலனில்லை!
அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி
மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க., அரசுக்கு
எதிராக பச்சைப் பொய்கள் கூறப்படுகின்றன' என்று கோபமாக பேசியுள்ளார்
முதல்வர் ஸ்டாலின். அவர், கொஞ்சம் ஆற அமர அமைதியாக யோசித்துப் பார்த்தால்,
பச்சைப் பொய்களுக்கு இடம் தந்தது யார் என்பது புரியும். தன் கண்ணை
மூடினால், உலகமே இருண்டு விட்டது என்று நினைக்குமாம் பூனை; அதுபோல உள்ளது,
ஸ்டாலினின் பேச்சு.
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான
விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வந்த வண்ணம்
உள்ளன. இதற்கெல்லாம் காரணம், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரத்தில்
நிகழ்ந்த குளறுபடிகளே என்பதில் சந்தேகமில்லை.
தி.மு.க., அரசுக்கு
எதிராக பச்சைப் பொய்கள் கூறப்படுகின்றன என்று சொல்லும் முதல்வர், பொய்
சொல்வதையே வழக்கமாகக் கொண்டவர்கள், தி.மு.க.,வினர் தான் என்பதை மறந்து
விட்டார்.
கடந்த சட்டசபை தேர்தலின் போது, 'நீட் தேர்வு ரத்து,
கல்வி கடன் ரத்து, படிப்படியாக மது விலக்கு அமல், மகளிருக்கு மாதம் 1,000
ரூபாய் உதவித்தொகை, காஸ் மானியம், மாதம் ஒரு முறை மின் பயன்பாடு
கணக்கெடுப்பு... என இன்னும் ஏராளமான பச்சை பொய்களை அள்ளி விட்டதே நீங்கள்
தானே முதல்வரே!
எதிர்க்கட்சியாக இருந்த போது, எந்தெந்த திட்டங்களை
எதிர்த்துப் போராடினீர்களோ, அதை தற்போது நிறைவேற்ற துடியாய்
துடிக்கிறீர்கள்; அதற்காக பல பொய்களையும் சொல்கிறீர்களே... அதெல்லாம்
பச்சைப் பொய்கள் இல்லையா? பச்சைப் பொய்கள் எது என ஆராய்ந்தால், உங்களை
நீங்களே மிஞ்சி விடுவீர்கள் முதல்வர் அவர்களே...
மற்றவர்கள் குறை
சொல்ல முடியாத அளவுக்கு சரியாக செயல்பட வேண்டியது, முதல்வராகிய உங்களின்
பொறுப்பு. அப்படி பொறுப்பாகவும், உஷாராகவும் செயல்பட்டு, ஆட்சிக்கு எதிரான
விமர்சனங்களை தவிடு பொடியாக்கப் பாருங்கள்; அதை விடுத்து அழுது
புலம்புவதில் பலனில்லை. 'எதிர்க்கட்சியினர் என்றால், அரசியல் தான் செய்வர்;
அவியல் செய்ய மாட்டார்கள்...' இது, நீங்கள் சொன்ன வாசகம் தான், மறந்து
விடாதீர்கள்!
கூரை ஏறி கோழி பிடிக்க முற்படுங்க!
விஜயராகவன் சுவாமியப்பன், கஞ்சபள்ளி, கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தில் அமையும் தொழில் நிறுவனங்களில், தமிழகத்தை சார்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவது உறுதி செய்யப்படும். தமிழகத்தில் புதிதாக தொழில் துவங்க வரும் நிறுவனங்களிடமும், இதுகுறித்து வலியுறுத்தப்படும்' என, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உயர்கல்வி முடிப்பவர்களில், 40 சதவீதம் பேர் மட்டுமே, பணிபுரிய தகுதியுடையவர்களாக இருக்கின்றனர். இதுவும், அலுவலர்கள் மட்டத்தில் பணி செய்யத் தயாராக இருப்பவர்கள் நிலவரம். உடல் உழைப்பு தொழிலாளர்கள் மட்டத்தில் பணிபுரிய, தமிழகத்தில் யாருமே தயாரில்லை என்பதே உண்மை.
அதற்கு காரணம், 'டாஸ்மாக்' கடைகளிலும், கள்ள மார்க்கெட்டிலும், ௨௪ மணி நேரமும் நடைபெறும் மதுபானங்கள் விற்பனை. இதில், மாற்றம் கொண்டு வராமல், நல்ல உடல் உழைப்பு தொழிலாளர்களை உருவாக்க முடியாது.
ஒரு 'குவார்ட்டரு'க்கான பணம் சேர்ந்ததும், உடனே அதை பத்திரமாக கொண்டு போய், 'டாஸ்மாக்' கடையில் கொடுப்பவர்களே அதிகம். அத்துடன், தமிழகத்தில், பல ஆண்டுகளாக குடிக்கு அடிமையானவர்களின் உழைக்கும் திறனும் குறைந்து விட்டது.
அதேநேரத்தில், வடமாநிலங்களில் இருந்து இங்கு வந்து பணிபுரியும் தொழிலாளர்களின், உழைக்கும் திறன் அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள், வேலை செய்யாத தொழில்களே இல்லை என்ற நிலைமை உருவாகி விட்டது. மேலும், அவர்கள் அடிக்கடி விடுமுறை எடுப்பதில்லை; கூடுதல் நேரம் பணிபுரிகின்றனர் என்பது உள்ளிட்ட பல காரணங்களால், தொழிலதிபர்களும் அவர்களையே விரும்புகின்றனர்.
அவர்களும் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில், குறைந்த அளவு செலவழித்து, மீதியை சொந்த ஊருக்கு அனுப்புகின்றனர்; இதனால், தமிழகத்தின் பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கிறது என்பதே உண்மை.
மது குடிப்பதால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு, அரசு தரப்பில் செய்யப்படும் மருத்துவ செலவு, ஆண்கள் மது அருந்துவதால், ஒவ்வொரு குடும்பமும் சந்திக்கும் பொருளாதார பின்னடைவு, அவர்களால் எதிர்காலத்தை இழக்கும் குழந்தைகள், வடமாநில தொழிலாளர்களால், நம் மாநிலத்தை விட்டு வெளியே செல்லும் பணம், அதனால், நம் மாநிலத்தில் தடைபடும் தனிநபர் வருமானம் என கணக்கிட்டால், 'டாஸ்மாக்' வருமானம் வாயிலாக அரசுக்கு கிடைக்கும் வருமானம் சொற்பமே!
எனவே, தமிழக அரசும், அமைச்சர்களும், வானம் ஏறி வைகுண்டம் போக முயற்சிக்காமல், முதலில் கூரை ஏறி கோழியை பிடிக்க முயற்சிக்க வேண்டும். அதாவது, 'டாஸ்மாக்' மதுக்கடைகளை ஒழித்து, தமிழர்களை குறிப்பாக, வருங்கால சந்ததியினரை, தொழில் திறன்மிக்கவர்களாக மாற்ற முற்பட வேண்டும்!
Advertisement