கோவை:காலமாற்றத்திற்கு ஏற்ப, பள்ளிக்கல்வியில் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்துவது குறித்த, உச்சி மாநாடு ரெசிடென்சி ஓட்டலில் நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட தனியார் பள்ளி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாநாட்டில் சிறப்பு விருந்தினர், கோவை ராணுவ மையத்தின் (கோவை டெரியர்ஸ்) கமாண்டிங் அலுவலர் கர்னல் தினேஷ் சிங் தன்வீர் பேசியதாவது:
பள்ளிக்கல்விதான், மாணவர்களின் சிந்தனையை துாண்டும் ஆரம்ப புள்ளி. அவர்களின் திறமையை வெளிக்கொணர, பள்ளிக்கூடங்கள் அதிக மெனக்கெட வேண்டும். இதற்கு புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவது காலத்தின் கட்டாயம். அதிக நேரம் பள்ளிகள் இயங்குவதாலோ, ஆசிரியர்களை பணிபுரிய செய்வதாலோ, புதிய சிந்தனைகளை கொண்டுவர முடியாது.
சுதந்திரமான கற்றல் முறை தான், மாணவர்களின் தேடலை விரிவாக்கும். பள்ளிக்கல்வியில் திறமையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அவர்களின் திறமைக்கேற்ப, ஊதியம் வழங்க வேண்டும்.
ஏனெனில் சிறந்த ஆசிரியர்களால் மட்டுமே, சிறந்த எதிர்கால சமுதாயத்தை உருவாக்க முடியும். மாணவர்களை ஒழுக்கம், கீழ்படிதல் உள்ளவர்களாக உருவாக்க முடியும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாநாட்டில், மத்திய கல்வி அமைச்சகத்தின் இன்னோவேசன் இயக்குனர் மோகித் கம்பீர், காணொலி வாயிலாக பேசினார்.
இ.பி.எஸ்.ஐ., நிறுவன ஆலோசகர் சித்தார்த் ஜெயின், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணிமேகலை மோகன், பார்க் கல்வி குழும சி.இ.ஓ., அனுஷா ரவி, ஆர்.ஐ.ஏ.எம்., ஸ்போர்ட்ஸ் அரேனா நிறுவனர் ஸ்வாதி அகர்வால் ஆகியோர் பங்கேற்றனர்.