மேடவாக்கம்:மேடவாக்கம் மற்றும் அதை சுற்றிலும், 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த சிறு, குறு மற்றும் தாங்கல் ஏரிகள், படிப்படியாக ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டு, வீடுகளாகவும், வணிக கட்டடங்களாகவும் மாறிவிட்டன. இதில், மேடவாக்கம் ஊராட்சியின் முக்கிய ஏரியான சித்தேரியும் சீரழிந்து வருகிறது.
பெரிய ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர், போக்கு கால்வாய் வழியாக சித்தேரியை வந்தடைகிறது.
சித்தேரி நிரம்பிய பின், இதிலிருந்து வெளியேறும் உபரி நீர், பள்ளிக்கரணை ஏரியை சென்றடைகிறது.
சித்தேரியின் நீர் வரத்து பாதையும், நீர் வெளியேறும் பாதையும் புதர்மண்டி, பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி வழிகிறது. மேலும், ஏரி முழுதும் ஆகாய தாமரைகள் மண்டி கிடக்கின்றன.
ஒரு காலத்தில், குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்ட குளம் தற்போது, கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. குப்பை, கழிவுகள் கொட்டப்படுகின்றன.
புதர்மண்டிய நிலையில், இரண்டு ஏக்கர் ஏரி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, தனியார் விளையாட்டு பயிற்சி நிலையமாக மாறி உள்ளது. ஏரியை சுத்தப்படுத்தி, நீர்வரத்து, வெளியேறும் பாதைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர் சந்தானம், 84, என்பவர் கூறியதாவது:
கடந்த 50 ஆண்டுகளில், தமிழகத்தில் எண்ணற்ற ஏரிகள் அழிக்கப்பட்டு விட்டன. தப்பி பிழைத்து, எஞ்சி நிற்கும் ஏரிகளும் கபளீகரம் செய்யப்படுகின்றன.
தற்போது, சென்னையில் எஞ்சியுள்ள ஏரிகள் அனைத்துக்கும் இடையே, ஒன்றுக்கொன்று நீர் வழித்தடம் இணைப்பு ஏற்படுத்த, அரசு முன்வர வேண்டும். இப்படி செய்வதால், அனைத்து ஏரிகளும் நிரம்பும். இதனால், ஒரு போதும் சென்னையில் குடிநீர் பஞ்சம் வராது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரை கடலில் கலக்க செய்கிறோம். பின், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு பல நுாறு கோடி ரூபாயை செலவழிக்கிறோம். இது தான் இன்றைய ஆட்சியாளர்களின் நிலையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.