தஞ்சாவூர்:திருவையாறு தியாகராஜரின், 176வது ஆராதனை விழாவுக்கு, நேற்று பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில், கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு ஆண்டுதோறும், ஐந்து நாட்கள் ஆராதனை விழா நடைபெறுகிறது.
இந்த ஆண்டுக்கான ஆராதனை விழா, ஜன., 6ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில், பல்வேறு இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தியாகராஜர் முக்தி அடைந்த பகுளபஞ்சமி தினமான, ஜன., 11ம் தேதி, தியாகராஜருக்கு பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி, இசையஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், தியாகராஜருக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.
இதற்காக நேற்று காலை, பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, முகூர்த்தம் நடைபெற்றது. இதில், தியாகராஜர் சபையின் தலைவரும், எம்.பி.,யுமான வாசன் மற்றும் சபை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதன் பின், ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
தியாகராஜர் ஆராதனை விழாவின் துவக்க நாளான, 6ம் தேதி மாலை, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், 11ம் தேதி காலை நடைபெறும் தியாகராஜர் பஞ்ச கீர்த்தனை விழாவில், தமிழக கவர்னர் ரவி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கவர்னர்கள் விழாவில் பங்கேற்பதன் மூலம், அவர்கள் இசைக்கு கொடுக்கும் முக்கியத்துவம், இந்திய அளவில் சபா நிகழ்ச்சிகளை கொண்டு செல்லும்.
மேலும், இசை ஆர்வலர்கள் பலருக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதமாக, இந்த ஆண்டு, ஆறு நாட்கள் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.