உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க., அரசுக்கு எதிராக பச்சைப் பொய்கள் கூறப்படுகின்றன' என்று கோபமாக பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவர், கொஞ்சம் ஆற அமர அமைதியாக யோசித்துப் பார்த்தால், பச்சைப் பொய்களுக்கு இடம் தந்தது யார் என்பது புரியும். தன் கண்ணை மூடினால், உலகமே இருண்டு விட்டது என்று நினைக்குமாம் பூனை; அதுபோல உள்ளது, ஸ்டாலினின் பேச்சு.
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கெல்லாம் காரணம், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரத்தில் நிகழ்ந்த குளறுபடிகளே என்பதில் சந்தேகமில்லை.
தி.மு.க., அரசுக்கு எதிராக பச்சைப் பொய்கள் கூறப்படுகின்றன என்று சொல்லும் முதல்வர், பொய் சொல்வதையே வழக்கமாகக் கொண்டவர்கள், தி.மு.க.,வினர் தான் என்பதை மறந்து விட்டார்.
![]()
|
கடந்த சட்டசபை தேர்தலின் போது, 'நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, படிப்படியாக மது விலக்கு அமல், மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை, காஸ் மானியம், மாதம் ஒரு முறை மின் பயன்பாடு கணக்கெடுப்பு... என இன்னும் ஏராளமான பச்சை பொய்களை அள்ளி விட்டதே நீங்கள் தானே முதல்வரே!
எதிர்க்கட்சியாக இருந்த போது, எந்தெந்த திட்டங்களை எதிர்த்துப் போராடினீர்களோ, அதை தற்போது நிறைவேற்ற துடியாய் துடிக்கிறீர்கள்; அதற்காக பல பொய்களையும் சொல்கிறீர்களே... அதெல்லாம் பச்சைப் பொய்கள் இல்லையா? பச்சைப் பொய்கள் எது என ஆராய்ந்தால், உங்களை நீங்களே மிஞ்சி விடுவீர்கள் முதல்வர் அவர்களே...
மற்றவர்கள் குறை சொல்ல முடியாத அளவுக்கு சரியாக செயல்பட வேண்டியது, முதல்வராகிய உங்களின் பொறுப்பு. அப்படி பொறுப்பாகவும், உஷாராகவும் செயல்பட்டு, ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை தவிடு பொடியாக்கப் பாருங்கள்; அதை விடுத்து அழுது புலம்புவதில் பலனில்லை. 'எதிர்க்கட்சியினர் என்றால், அரசியல் தான் செய்வர்; அவியல் செய்ய மாட்டார்கள்...' இது, நீங்கள் சொன்ன வாசகம் தான், மறந்து விடாதீர்கள்!