வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கட்னி: மத்திய பிரதேசத்தில் கோவிலில் வழிபட்டு கொண்டிருந்தபோதே, பக்தர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
ம.பி.,யின் கட்னி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மேஹானி. மருந்து கடை வைத்திருந்த இவர், ஷீரடி சாய்பாபாவின் தீவிர பக்தர். வியாழன் தோறும் சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த 1ம் தேதி ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு வந்தார். அங்கு சாய் பாபாவின் பாதங்களை பக்தர்கள் தலை வைத்து வணங்குவது வழக்கம்.
ராஜேஷ் மேஹானி முழங்காலிட்டு அமர்ந்து, பாபாவின் பாதங்களில் தலையை வைத்து வணங்கினார்; 15 நிமிடங்கள் வரை ஆகியும் அவர் எழவில்லை. பின்னால் காத்திருந்த பக்தர்கள் அவரை தட்டி எழுப்பினர்.
ஆனால் அவர் எழாததை அடுத்து கோவில் நிர்வாகத்தினரை அழைத்தனர். அவர்கள் வந்து ராஜேஷை மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் துாக்கி சென்றனர். அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.