வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் மாநாட்டை அடுத்தாண்டு பிப்., இரண்டாவது வாரத்தில் சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்றுள்ளார். செயற்குழு கலைக்கப்பட்டு, கட்சித் தலைமைக்கு ஆலோசனை வழங்க தற்காலிகமாக வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வழிகாட்டுதல் குழுவின் முதல் கூட்டம் புதுடில்லியில் நேற்று நடந்தது.
கார்கே, முன்னாள் தலைவர் சோனியா, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால், மூத்த தலைவர்கள் சிதம்பரம், ஆனந்த் சர்மா, மீரா குமார், அம்பிகா சோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காஷ்மீரில் நிறைவு
இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து வேணுகோபால் கூறியதாவது: கட்சியின் மாநாடு, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பிப்., இரண்டாவது வாரத்தில் நடத்தப்படும். இதில், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
முன்னாள் தலைவர் ராகுல் மேற்கொண்டுள்ள பாரத ஒற்றுமை யாத்திரை பெரும் வெற்றி பெற்றுள்ளது. கன்னியாகுமரியில் துவங்கிய இந்த பாதயாத்திரை, வரும், ௨௪ம் தேதி புதுடில்லியை அடையும். அடுத்தாண்டு ஜன., ௨௬ல் காஷ்மீரில் நிறைவு செய்யப்படும்.
![]()
|
குற்றச்சாட்டுகள் பட்டியல்
இதன் தொடர்ச்சியாக, ஜன., 26ல் இருந்து இரண்டு மாதங்களுக்கு, கையோடு கை சேர்ப்போம் என்ற இயக்கம் நடத்தப்படும். நாடு முழுதும் கிளை, வட்டார அளவில் பாதயாத்திரையை கட்சியினர் மேற்கொள்வர். இதில், பாரத ஒற்றுமை யாத்திரை தொடர்பான ராகுலின் செய்தி மற்றும் பிரதமர் மோடி அரசின் மீதான குற்றச்சாட்டுகள் பட்டியல் மக்களிடையே வினியோகிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:கட்சியில் உள்ள அனைவருக்கும் பொறுப்புகள், கடமைகள் உள்ளன. இவை அனைத்து நிலைகளில் உள்ளவர்களுக்கும் பொருந்தும். தங்களுடைய பொறுப்புகளை சரியாக செயல்படுத்த முடியாதவர்கள் விலகி, மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும்.கட்சியில் பொறுப்புணர்வுடன், கட்டுக்கோப்பாக இருந்தால் தான், மக்களின் நம்பிக்கையை பெற்றால் தான், தேர்தல்களில் வெற்றி பெற்று மக்களுக்கு சேவையாற்ற முடியும்.அடுத்த ௩௦ - ௯௦ நாட்களில் மேற்கொள்ளப்பட உள்ள போராட்டங்கள், நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில தலைவர்களும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.