வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஒட்டாவா: தங்கள் நாட்டில் வேலை பார்க்கும் வெளிநாட்டவரின் குடும்பத்தாரும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கனடா அறிவித்துள்ளது. இது அங்கு வாழும் இந்தியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில் தற்போது உயர் திறன் பதவிகளில் உள்ள வெளிநாட்டவரின் கணவர் அல்லது மனைவி மட்டுமே வேலைக்காக விண்ணப்பிக்க முடியும். இந்நிலையில், இந்தக் கட்டுப்பாட்டை நீக்கி, தங்கள் நாட்டில் பணியாற்றும் அனைத்து வெளிநாட்டவரின் மனைவி அல்லது கணவர், குழந்தைகளும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என, கனடா அரசு அறிவித்துள்ளது.
கனடா அரசின் குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை துறை அமைச்சர் சீன் பிரேசர் இது குறித்து நேற்று கூறியதாவது: நாட்டில் திறமையான தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு பற்றாக்குறை உள்ளதாக தொழில் நிறுவனங்கள் கூறி வருகின்றன. அதுபோல, இங்கு பணியாற்றும் வெளிநாட்டவரும், தங்களுடைய குடும்பத்தாருக்கும் வேலை வாய்ப்பு தர வேண்டும் என்று கோரி வருகின்றன.
![]()
|
இதையடுத்து, கனடாவில் பணியாற்றும் அனைத்து வெளிநாட்டவரின் கணவன் அல்லது மனைவி, தகுதியுள்ள குழந்தைகள், வேலைக்கு விண்ணப்பிக்கும் வகையில் விலக்கு அளிக்கப்படுகிறது. இது, கனடாவில் வசிக்கும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவருக்கு பொருந்தும்.
இந்த திட்டம், மூன்று கட்டங்களாக, 2023 ஜனவரியில் இருந்து செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கனடா அரசின் இந்த அறிவிப்பால், இங்கு வசிக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.