முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கோவை செல்வராஜ், தி.மு.க.,வில் இணைய உள்ளதாக, ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1991 - 96ம் ஆண்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர், கோவை செல்வராஜ். அ.தி.மு.க., - காங்., கூட்டணி முறிந்த பின், சட்டசபையில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., ஆதரவு காங்., - எம்.எல்.ஏ.,வாக, கோவை செல்வராஜ் செயல்பட்டார். அப்போது அவர், 'ஜெயா' காங்., - எம்.எல்.ஏ., என அழைக்கப்பட்டார்.
தமிழக காங்., சேவாதள மாநில தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். பின் காங்கிரசில் இருந்து விலகி, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.,வில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின், பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வை ஆதரித்தார். அவருக்கு அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் பதவியும் வழங்கப்பட்டது.
![]()
|
கடந்த, 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும், 2021ம் ஆண்டின் சட்டசபை தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு தரவில்லை. இதனால், பழனிசாமி மீது அதிருப்தி அடைந்தார்; பன்னீர்செல்வம் தலைமையை ஆதரித்தார்.
அ.தி.மு.க., ஒற்றை தலைமை விவகாரத்தால் கட்சி பிளவுபட்டபோது, பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க.,வில், கோவை மாநகர் மாவட்ட செயலராக நியமிக்கப்பட்டார். அங்கு, அவருக்கும், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கும் கோஷ்டி மோதல் உருவாகி உள்ளது. இதையடுத்து, மாவட்ட செயலர் பதவியை கோவை செல்வராஜ் ராஜினாமா செய்து உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் டில்லி பயணம் முடித்து, சென்னைக்கு திரும்பியதும், அவரது முன்னிலையில், தி.மு.க.,வில் கோவை செல்வராஜ் இணைவார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -