ஆமதாபாத்: குஜராத் 2ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவில் பிரதமர் மோடி தனது ஓட்டை ஒரு பள்ளியில் உள்ள சாவடியில் பதிவு செய்தார். ஓட்டுப்போட வந்த பிரதமருக்கு ஆமதாபாத் மக்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது.
நடந்து சென்று மக்களிடம் கையசைத்தார்
14 மாவட்டங்கள் 93 தொகுதிகளில் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஓட்டுப்பதிவையொட்டி சொந்த மாநிலமான குஜராத்திற்கு பிரதமர் மோடி நேற்று சென்றார். அவரது இல்லத்திற்கு சென்று தாயாரிடம் வணங்கி ஆசி பெற்றார்.

இன்று காலை 9 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து ஓட்டுப்போட பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றார் மோடி. இவரது வருகையை முன்னிட்டு சாலைகளின் இருபுறமும் திரளாக நின்ற பொதுமக்கள் மோடியை கையசைத்து வரவேற்றனர். நீண்ட தூரம் நடந்தபடி ஓட்டுச்சாவடிக்கு சென்றார். மக்களைப் பார்த்து கையை உயர்த்தி காட்டினார். பல்வேறு இடங்களில் மேள, தாளம் அடித்தபடி பா.ஜ., தொண்டர்கள் ஆடி மகிழ்ந்தனர்.
ஆமதாபாத்தில் உள்ள ரானிப் என்ற பகுதியில் உள்ள நிஷான் பள்ளியில் பிரதமர் ஓட்டளித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவரது மகனும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான ஜெய் ஷா ஆகியோர் ஆமதாபாத்தில் உள்ள நரன்புரா ஓட்டுச்சாவடியில் தங்களது ஓட்டினை பதிவு செய்தனர். பிரதமர் மோடியின் தாயார், காந்திநகரில் உள்ள ராய்சன் பிரைமரி பள்ளி ஓட்டுச்சாவடியில் தனது ஓட்டினை பதிவு செய்தார்.

ஓட்டளியுங்கள்: மோடி வேண்டுகோள்
முன்னதாக பிரதமர் வெளிட்ட செய்திக் குறிப்பில்: குஜராத் 2ம் கட்ட தேர்தலில் மக்கள் திரளாக ஓட்டளிக்க வேண்டும் குறிப்பாக பெண்கள், இளம் வாக்காளர்கள் அவசியம் ஓட்டளித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் என வலியுறுத்தி உள்ளார்.

ஓட்டளித்தப்பின் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'குஜராத், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் டில்லி மக்களால் தேர்தல், ஜனநாயக திருவிழா போல் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் ஆர்வமுடன் ஓட்டளிக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் எனது பாராட்டுகள். இந்த தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மிகச் சிறப்பாகவும், அமைதியாகவும் நடத்தி வருகிறது' என்றார்.
ஓட்டுப்பதிவு நிறைவு:
93 தொகுதிகளுக்கான 2ம் கட்ட தேர்தலின் ஓட்டுப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. 5 மணி நிலவரப்படி 58.68 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.