திருப்பூர்: 'வேதாகம முறைப்படி, முழுமையாக கற்றுணர்ந்து பூஜை செய்தால் மட்டுமே பரிபூரண பலன் கிடைக்கும்' என, வேதபாடசாலை முதல்வர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில்களில், அர்ச்சகர் பயிற்சி ஐந்து ஆண்டுகள் என்பதை, தமிழக அரசு, ஓராண்டாக குறைத்துள்ளது. இந்த முடிவுக்கு வேதபாடசாலை முதல்வர்களும், ஆதீனகர்த்தர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், கூனம்பட்டி, ஸ்ரீகுருகுலம் வேதசிவாகம பாடசாலை முதல்வர் நடராஜ சுவாமிகள்:

வேதாகம சமஸ்கிருத பாடசாலை என்பது சாதாரண விஷயமல்ல; தொடர்ச்சியாக, ஐந்து ஆண்டுகள் வரை, பயின்றால் மட்டுமே, கோவில் கும்பாபிஷேகம் நடத்தும் அளவுக்கு, ஆகம சிற்ப சாஸ்திரங்களை அறிய முடியும். அதன் பிறகும் ஓராண்டு, செயல் பயிற்சி அவசியம். வேதாகம வல்லுனர்களுடன் அரசு தரப்பு ஆலோசித்து, அர்ச்சகர் பயிற்சி ஆண்டை, ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக அறிவிக்க வேண்டும்.
பெங்களூரு, ஸ்ரீஸ்ரீ குருகுல வேதாகம பாடசாலை, முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம்:

நமது பூஜைமுறை என்பது, வெறும் தொழில் சார்ந்த முறையல்ல; பயிற்சி என்பது, திருக்கோவில் பூஜைமுறையை நேர்த்தியாக கற்பது. ஆலயம் அமைப்பு முறை; பூஜை முறைகள்; பரிகாரபூஜை முறைகள் என, ஆகமங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. முழுமையாக கற்றுணர்ந்து, பூஜை செய்தால் மட்டுமே பரிபூரண பலன் கிடைக்கும். வழிபாட்டு மரபுகளை பாதுகாக்கவே, பூஜை முறை வகுக்கப்பட்டுள்ளது. அர்ச்சகர் பயிற்சியை, ஐந்து ஆண்டுகளாக நிர்ணயிக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி, வாகீசர் மடம், காமாட்சிதாச சுவாமிகள்:

வேத ஆகமங்களில் குறிப்பிட்டுள்ளபடி, பூஜை முறைகளை அறிந்து கொள்ளவே ஓராண்டு ஆகிவிடும். அதன் பிறகே, முறையான பயிற்சி பெற்று அர்ச்சகராக முடியும். ஓராண்டுக்குள் பயிற்சி அளிப்பது என்பது, சிறப்பாக இருக்காது. நமது முன்னோர்கள், பூஜை முறைகளை வகுத்து வைத்துள்ளனர்; அதன்படியே பூஜை, வழிபாடு செய்ய, குறைந்தது மூன்று ஆண்டுகளாவது பயிற்சி பெற வேண்டும்; ஐந்தாண்டு பயிற்சியே சிறந்த அர்ச்சகர்களை உருவாக்கும்.