வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் தான் மட்டும்தான் திமுக.,வை எதிர்ப்பதாகவும், ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பூனையாக தமிழக பா.ஜ., இருப்பதாகவும் பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு குறித்து கடந்த சில நாட்களாகவே பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், தமிழக அரசு உள்நோக்கத்தோடு செயல்படுவதாகத் தெரிய வந்தால், தமிழக அரசு கலைக்கப்படும் எனக் கருத்து தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
அதேபோல், 2019ம் ஆண்டுக்கு முந்தைய காஷ்மீர் வகை தேச விரோத சக்திகளின் எழுச்சி அச்சுறுத்தலில் தமிழகம் உள்ளதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இப்படியாக திமுக அரசை தொடர்ந்து விமர்சித்தும், எதிர்த்தும் வரும் சுப்பிரமணியன் சுவாமி தற்போது வெளியிட்ட அறிக்கையில், 'தமிழகத்தில் நான் மட்டும்தான் திமுக.,வுக்கு எதிர்க்கட்சி போல் தெரிகிறது.
ஸ்டாலின் உறுமினால் பயந்து பதுங்கும் பூனையாக இருக்கிறது தமிழக பா.ஜ.,; சினிமா கலாச்சாரம் தமிழக பா.ஜ.,வை அழித்துவிட்டது' என தெரிவித்துள்ளார். பா.ஜ.,வின் மூத்த தலைவரே பா.ஜ.,வை விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.