சென்னை: விஜய் நடித்து பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள 'வாரிசு' படத்தின் 2வது பாடல் நேற்று (டிச.,4) மாலை வெளியானது. வெளியான சில மணிநேரங்களில் டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. இதிலெல்லாம் எந்த பிரச்னையும் இல்லை. இந்த பாடலில் இடம்பெற்ற சில வரிகள் தான் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
'அவமானம் கெடச்சா... அதில் கிரீடம் ஒன்ன உருவாக்கு...' - அந்த பாடலில் இடம்பெற்ற ஒரு வரி இது. இதில் கிரீடம் என்று எதை சொல்கிறார்கள்? அது முதல்வர் பதவியாக தான் இருக்கும் என்று சந்தோஷப்படுகிறார்கள் விஜய் ரசிகர்கள். ஆனால் இந்த வரி திமுக.,வினர் இடையே கடுப்பை கிளப்பியுள்ளது. 'அரசியலுக்கு இன்னும் நுழையவும் இல்லை, கட்சியையும் ஆரம்பிக்கவில்லை. அதற்குள் கிரீடத்திற்கு ஏன் ஆசைப்படுகிறார் இந்த நடிகர்' என்று ஆத்திரத்துடன் கேட்கின்றனர் திமுக.,வினர்.

விஜய் இதோடு விட்டாரா.. அதன்பிறகு, 'புதிய எதிரியே வா.. என்னை எதிர்க்கவே.. பழைய எதிரிகள் என் ரசிகர் படையிலே..' என்ற வரியும் எழுதப்பட்டுள்ளது. இதே வரி பாடலின் கடைசியிலும் வருகிறது. அப்படியென்றால் இதில் எதிரி என்பது யார்? பாடல் முழுக்க தன்னை 'பில்டப்' செய்யும் விஜய், இடையிடையே ரசிகர்களை உசுப்பேற்றி படத்தை ஓடவைக்க வேண்டும் என்பதற்காக 'தீ, நெருப்பு, கிரீடம், புதிய எதிரி' என்ற வார்த்தைகளைப் போட்டுள்ளார் என்றும் திமுக.,வினர் வசைபாடுகின்றனர்.

பாடலின் வீடியோவில் 'தளபதி' என்ற வார்த்தையில் 'தீ' எரிந்துகொண்டே இருக்கிறது. நடிகர் விஜய்க்கு தளபதி என்ற பட்டம் தரப்படுவதற்கு முன்பே, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தரப்பட்ட பட்டம் அது. திமுக.,வினர் எப்படி கருணாநிதியை 'கலைஞர்' என்று மட்டுமே அழைத்தார்களோ, அதேபோல் ஸ்டாலினை 'தளபதி' என்றுதான் அழைப்பார்கள். தப்பித்தவறிக்கூட அவர்களது வாயில் பெயர் வராது; பட்டம் மட்டும்தான் வரும். அப்படியென்றால் தீ எரிந்துகொண்டிருக்கும் தளபதி யார்? பாடலில் இடம்பெற்ற புதிய எதிரி யார்? என்றெல்லாம் திமுக.,வினர் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆளும்கட்சியை தேவையில்லாமல் தீண்டுவதாகவும் எதிரி என்றெல்லாம் வர்ணித்து சீண்டுவதாலும், வாரிசு படத்திற்கு சிக்கல் வருமோ என்று திரையுலகினர் திகைத்து நிற்கின்றனர்.