பூமியில் ஒரு நாள் சூரிய ஒளி இல்லாவிட்டால் இயற்கை செயல்பாட்டில் பலவித மாற்றங்கள் ஏற்படும். ஆனால் அமெரிக்காவின் ஒரு நகரத்தில் தொடர்ந்து 65 நாட்கள் சூரியன் உதிக்காது என்றால் நம்பமுடிகிறதா? கேட்பதற்கு வியப்பாக இருந்தாலும் பூமியின் அதிசயங்களில் இதுவும் ஒன்று.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள உட்கியாக்விக் (Utqiagvik) நகரில்தான் இந்நிகழ்வு நடக்கிறது. இங்கு ஆண்டுதோறும் நவம்பர் 18 அல்லது 19 ஆம் தேதிகளில் மறையும் சூரியன், மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தின் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில்தான் உதயமாகிறது.

ஜனவரிக்குப் பிறகு சாதாரணமாக உள்ள சூரியனின் உதயமும் அஸ்தமனமும் மீண்டும் மே மாதத்தில் மாற்றம் அடையும். மே 11 அல்லது 12 ஆம் தேதிகளில் தொடங்கி, ஜூலை 31 அல்லது ஆகஸ்ட் 1 வரை சூரியன் சுமார் 80 நாட்களுக்கு அஸ்தமிக்காது. இந்தக் காலகட்டத்தில் இங்கு அதிகபட்சமாக ஐந்து டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவுகிறது. மற்ற காலகட்டங்களில் இப்பகுதியில் வெப்பநிலை உறைநிலைக்குக் கீழேயே காணப்படும்.
இந்த ஆண்டும் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி இங்கு சூரியன் அஸ்தமனம் ஆகியுள்ளது. மீண்டும் சூரியன் அடுத்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி உதிக்கும். இரவு என்றால் முழுவதும் இருள் சூழ்ந்ததுபோல் அல்லாமல் பகல் நேரத்தில் சூரிய அஸ்தமனம் அல்லது உதயத்தின்போது உள்ள லேசான சூரிய வெளிச்சத்தைக் காணலாம். ஆனால் அடுத்த ஜனவரிவரை இப்பகுதி மக்கள் சூரியனைக் காணமுடியாது என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள். பூமி அச்சின் சாய்வின் காரணமாக இந்நிகழ்வு குளிர்காலத்தில் நடக்கிறது. இந்நிகழ்வு துருவ இரவு (Polar Night) என அழைக்கப்படுகிறது.

பகலே இல்லாமல் 24 மணிநேரமும் இரவாக உள்ள இந்நிகழ்வு வட மற்றும் தென் துருவப் பகுதிகளில் நடக்கிறது. பூமியின் சாய்வானது, சூரியனின் வட்டு எதுவும் அடிவானத்திற்கு மேல் தெரியாதபடி செய்கிறது. இதனால்தான் இந்த நகரில் வானிலை மாற்றம் ஏற்படுகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்நிகழ்வு இந்த நகரில் மட்டுமல்ல வேறு சில நகரங்களிலும் நடக்கிறது. இதில் முதன்மை பட்டியலில் உட்கியாக்விக் நகரம் உள்ளது.
இந்நிகழ்வு இந்த நகரவாசிகளின் அன்றாட வாழ்க்கையை பெரும்பாலும் பாதிப்பதில்லை. இங்கு வசிக்கும் சில ஆயிரம் மக்கள், தெரு விளக்குகள் உதவியுடன் இந்த மங்கல் வெளிச்சம் கொண்ட சூரியனுடன் பாதி இருளில் வாழப் பழகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.