ஜெய்ப்பூர்: 'இது சாவர்க்கரின் கட்சியோ, கோட்சேவின் கட்சியோ அல்ல; மகாத்மா காந்தியின் கட்சி' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் விதமாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ' எனப்படும் ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தை தொடர்ந்து தற்போது ராஜஸ்தானில் நடைபயணம் தொடர்ந்து வருகிறார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் ராகுலை வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து காங்., கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:

பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. இருப்பினும் அவர்களை நாட்டில் வளர விடக்கூடாது. இந்த ஒற்றுமை நடைபயணத்தில் சிறந்த பாடம் ஒன்றை கற்று வருகிறேன். விமானம், ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் போது பல விஷயங்களை புரிந்து கொள்ள முடியாது. ஆனால் இந்த பயணத்தில் விவசாயிகளின் கைகளை குலுக்கும் போது நான் தெரிந்து கொண்டேன்.
நாட்டிற்கு நல்லது புரியாத இந்த மத்திய அரசானது 3-4 தொழிலதிபர்களின் பயன்களை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது. இந்த பயணத்தில் வரும் ஒவ்வொரு தொண்டரும் அதிகாலை 5 மணிக்கு சாலைகளில் இறங்கி விடுவார்கள். ஏனென்றால் இது மகாத்மா காந்தியின் கட்சி; சாவர்க்கரின் கட்சியோ அல்லது கோட்சேவின் கட்சியோ அல்ல. எங்களுக்கு எப்படி கடினமாக உழைப்பதென்பது தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.