ஆண்டிபட்டி: பாசனம் மற்றும் குடிநீருக்காக வைகை அணையில் இருந்து நீர் தொடர்ந்து வெளியேறுவதால் அணை நீர்மட்டம் கடந்த இரு வாரங்களில் 5 அடி வரை குறைந்துள்ளது.
பெரியாறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் வைகை அணைக்கு நீர் வரத்து கிடைக்கும். கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து பெய்த மழை, பெரியாறு அணை நீர் வரத்தால் வைகை அணை நீர்மட்டம் நவம்பர் 17 வரை 70.01 அடியாக பராமரிக்கப்பட்டது. அணை உயரம் 71 அடி.
கடந்த இரு வாரங்களில் வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை இல்லை. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1000 முதல் 1200 அடி வரை இருந்தது. டிசம்பர் 4 வரை மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு வினாடிக்கு 1650 கனஅடியாக இருந்த நீர் வெளியேற்றம் நேற்று 1450 கனஅடியாக குறைக்கப்பட்டது. குடிநீருக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது.
பொதுப்பணித்துறையினர் கூறியதாவது: இரு வாரங்களாக வைகை அணைக்கான நீர் வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகம் உள்ளது. நவம்பர் 17ல் 70.01 அடியாக இருந்த நீர்மட்டம் நவம்பர் 23 ல் 68.44, நவம்பர் 29ல் 66.54 அடியாகவும் நேற்று 65.29 அடியாகவும் குறைந்துள்ளது. கடந்த 18 நாட்களில் அணை நீர் மட்டம் 4.72 அடி குறைந்துள்ளது.
நேற்று அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1510 கன அடியாகவும், அணையில் இருந்து வினாடிக்கு நீர் வெளியேற்றம் 1519 கன அடியாகவும் இருந்தது. தேனி மாவட்டத்தில் மழைக்கான சூழல் தொடர்வதால் வைகை அணை நீர்மட்டம் மீண்டும் உயரும் வாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.