பாட்னா : சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேசிய தலைவர் லாலு பிரசாத் யாதவ், 74, நலமுடன் இருப்பதாக அவரது மகனும், பீஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேசிய தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவ காரணங்களின் அடிப்படையில் அவருக்கு, 'ஜாமின்' வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக, தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் சென்றார். அங்கு லாலுவின் மகள் ரோஹிணி ஆச்சார்யா வசித்து வருகிறார். இவரது கணவர் சிங்கப்பூரில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
![]()
|
லாலுவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாக்டர்கள் பரிந்துரைத்தனர். தன் சிறுநீரகங்களில் ஒன்றை தந்தைக்கு தானமாக அளிக்க லாலுவின் மகள் ரோஹிணி முன்வந்தார். மருத்துவ பரிசோதனையில் அவரது சிறுநீரகம் பொருந்திப் போனது. இதையடுத்து, டிச., 5ல் அறுவை சிகிச்சைக்கு தேதி குறிக்கப்பட்டது.இதற்காக, லாலுவின் மகனும், பீஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் சிங்கப்பூர் சென்று தன் தந்தையை அருகில் இருந்து கவனித்து வந்தார். திட்டமிட்டபடி இன்று காலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.
இதன் பின் தேஜஸ்வி தன் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவு:சீறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. என் தந்தை லாலு நலமாக உள்ளார். அறுவை சிகிச்சை கூடத்தில் இருந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு சிறுநீரக தானம் அளித்த என் மூத்த சகோதரி ரோஹிணி நலமுடன் உள்ளார். தந்தையின் நலனுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.