ஊட்டி:டில்லியில் நடைபெற்ற என்சிசி பயிற்சியில் உதகை அரசு கலைக் கல்லூரி மாணவி தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்டு இந்திய ராணுவத்தின் பயிற்சி விமானத்தில் பயணித்து, இரண்டு கிலோமீட்டர் உயரத்திலிருந்து பாராசூட் குதித்து சாகச பட்டியலில் இடம் பிடித்தார்.
தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோகிலவாணி. நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு கல்லூரியில் இளங்கலை சுற்றுலாவியல்துறை மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். என்.சி.சி எனப்படும் தேசிய மாணவர் படையில் தீவிர நாட்டம் கொண்ட இவர், பல்வேறு பயிற்சிகளில் பங்கேற்று வருகிறார்.இந்நிலையில், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பாரா கேம்ப பயிற்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற ஒரே மாணவியாக கோகிலவாணி இடம்பெற்றுள்ளார். பிரத்யேக விமானத்தில் பயணித்து 2 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்து சாகசப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
மாணவி கோகிலவாணியின் பாராசூட் சாகசம் குறித்து தெரிவித்த தேசிய மாணவர் படை (என்.சி.சி) அலுவலர்கள்,உதகை அரசு கலை கல்லூரி வரலாற்றிலேயே முதன்முறையாக மாணவி ஒருவர் பாரா கேம்ப் பயிற்சியில் பங்கேற்றிருக்கிறார். இந்த முறை தமிழகத்தில் இருந்து தேர்வான ஒரே பெண் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.
அதற்கான உடல் தேர்வில் தேர்ச்சி கோகிலவாணி பெற்றிருந்தார். கடுமையான பலகட்ட பயிற்சிக்குப் பின்னர் அவர், பாரா கேம்ப் பயிற்சிக்குத் தேர்வானார். கர்னல் ஸ்ரீனிவாஸின் ஊக்கத்தால் என்.சி.சி மாணவிகளுடன் பாராசூட் சாகசத்தில் அவர் வெற்றிகரமாக ஈடுப்பட்டார்" என்றனர்.