என்.பரசுராமன், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இந்தாண்டு ஜூலை மாதம், சென்னையில் நடைபெற்ற, 'செஸ் ஒலிம்பியாட்' போட்டியை துவக்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி வந்த போது, அவருக்கு அளித்த பாதுகாப்பில், தமிழக அரசு பெரிய குளறுபடி செய்தது' என்று, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு தர்க்க ரீதியாக பதில் தர முடியாத முதல்வர் ஸ்டாலின், 'மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க சிலர் சதி செய்கின்றனர். மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை; ஆபத்பாந்தவனாக, தி.மு.க., ஆட்சி உள்ளது' என்று புலம்பியுள்ளார்.
'சட்டம் - -ஒழுங்கை சீர்குலைக்க, சிலர் சதி செய்கின்றனர்' என்றால், அந்தச் சதிகாரர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே, மாநில முதல்வரின் கடமை. அந்த இடத்தில் தானே, அவர் அமர்ந்திருக்கிறார். பொறுப்பான பதவியில் இருப்பவர் நடவடிக்கை எடுக்காமல், புலம்புவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?
இப்படித் தான், இந்தாண்டு அக்டோபரில் நடந்த தி.மு.க., பொதுக்குழுவில் பேசிய ஸ்டாலின், உடன் பிறப்புகளின் அடாவடிகளாலும், அத்துமீறல்களாலும், தன்னால் இரவில் உறங்க முடியவில்லை என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தார்; அதன் பிறகும், உடன்பிறப்புகளின் அத்துமீறல்கள், 1 சதவீதம் கூட குறைந்ததாக தெரியவில்லை.
'முதல்வர் புலம்பியபடியே இருக்கட்டும்; நாங்கள், எங்கள் காரியத்திலே கண்ணாக இருக்கிறோம்' என்றல்லவா,உடன்பிறப்புகள் நடந்து கொண்டிருக்கின்றனர். அதனால் தான் இப்போது, பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் நடந்த குளறுபடிகள் குறித்து, கவர்னரிடம் புகார் கொடுக்கும் அளவுக்கு, நிலைமை விபரீதமாகி இருக்கிறது.
பொறுப்புடன் நடந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டியகாவல் துறை, தன் கரங்களை தானே கட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறதா அல்லது யாராவது கட்டிப் போட்டு வைத்திருக்கின்றனரா என்று தெரியவில்லை.
பாதுகாப்பு குளறுபடிகளால் தான், முன்னாள் பிரதமர் ராஜிவ், நம் தமிழ் மண்ணில், ஸ்ரீபெரும்புதுாரில், மனித வெடிகுண்டால் குறி வைத்து தாக்கப்பட்டு உயிரிழந்தார்; அப்போது நடைபெற்றதும் இதே தி.மு.க., ஆட்சி தான்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி செய்து, மீண்டும் ஒரு பயங்கரவாத செயல் நிகழ வழி வகுத்திருக்கிறது கழக ஆட்சி. ஆனால், சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க, சிலர் சதி செய்வதாக கதை அளந்து கொண்டு இருக்கிறார் முதல்வர்.
ராஜிவ் படுகொலை நிகழ, அப்போதையதி.மு.க., ஆட்சியில் நிலவிய, சட்டம் - ஒழுங்கு குளறுபடிகளே காரணம். அந்த படுபாதக செயலுக்கு, மக்கள் பாவமன்னிப்பு அளித்ததால் தான், தி.மு.க., மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர முடிந்தது. இனியும் ஒரு துயர சம்பவம் தமிழ் மண்ணில் நிகழ்ந்தால், அதற்கு பாவ மன்னிப்பே கிடைக்காது முதல்வரே!
ரேஷனில் தரமற்ற பாமாயில் வினியோகமா?
ஜெ.ருத்ர
மூர்த்தி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: ரேஷன்
கார்டுதாரர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் ரேஷனில், செறிவூட்டப்பட்ட சமையல்
எண்ணெயான பாமாயில் லிட்டர், ௨௫ ரூபாய்க்கு வழங்கப்படுகிறது; ஏராளமானோர் இதை
வாங்கி பயன்படுத்துகின்றனர்.
முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில்,
பிரபல நிறுவனம் ஒன்று, ரேஷனில் வழங்கப்படும் இந்த பாமாயிலை சுத்திகரித்து
வழங்கி வந்தது. சாதாரணமாக, பல சரக்கு கடைகளில் பாமாயில் வாங்கினால்,
அதற்கான காலாவதி காலம், ஆறு மாதம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆனால், தற்போது ரேஷனில் வழங்கப்படும் பாமாயிலில் மூன்று மாதம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால்,
மற்ற கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு விற்பனையாகாமல், மீண்டும்
நிறுவனங்களுக்கே திரும்பி வரும் பாமாயில், 'ரீ பேக்கிங்' செய்யப்பட்டு,
ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறதோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில்
எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி, பல ரேஷன் கடைகளில், காலாவதியான எண்ணெய் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுவதாகவும் புகார்கள் வருகின்றன.
குறிப்பாக,
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், பாமாயிலை சுத்திகரித்து வழங்கும்
பொறுப்பு, பிரபல நிறுவனத்திடம் இருந்து, மற்றொரு நிறுவனத்திற்கு
மாற்றப்பட்டதாகவும், அது முதல் இந்த மாதிரியான குளறுபடிகள்நிகழ்ந்து
வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மொத்தத்தில்,
பாமாயில்விவகாரத்தில் தவறு நடக்கிறது... அது சுத்தமானதாக இல்லை என்றே
தோன்றுகிறது. சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு துறையினர், இந்த விஷயத்தில்
கவனம் செலுத்த வேண்டும் என்பதே, பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
சிவ பக்தர்கள் சாபத்திற்கு ஆளாகாதீங்க!
பி.வி.சீனிவாசன்,
பின்னத்துார், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: பால்ய விவாகம்,
கணக்கு கேட்டல், நகை சரிபார்ப்பு என,தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல்,
சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் மீது அடுக்கடுக்காக குற்றம் சாட்டப்பட்டு,
அவர்கள், 'டார்ச்சர்' செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களை நிம்மதியாக பூஜை,
புனஸ்காரங்களில் ஈடுபட விடாமல் ஆட்சியாளர்கள் தடுக்கின்றனர்.
கடந்த,
௧௮௭௧ல், கடலுார் நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு
வந்த போது, 'அருணகிரி நாதரின் திருப்புகழில்,நடராஜருக்கு என்று
படைக்கப்பட்டவர்கள் தீட்சிதர்கள்' என்று கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான சுவடிகளை பார்த்த பிறகே, வடக்குப்பட்டு சுப்பிரமணிய பிள்ளை, 6,000 திருப்புகழ் பாடல்களை தேடி அலைந்து தொகுத்தார்.
தமிழகத்தில் எந்தக் கோவில் அர்ச்சகர்களும் செய்யாத ஒன்றை, சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
தீட்சிதர்கள்
குடும்பத்தில் யார் இறந்தாலும், உடலானது, இரண்டு மணி நேரத்தில்
சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டு விடும்; அதற்கு
காரணம், பூஜைகள்தடைபடக்கூடாது என்பதே. இது, சிதம்பரத்திற்கே உள்ள பெருமை!
அறநிலையத்
துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், எத்தனையோ பிரச்னைகள் உள்ளன...
கோவில் நிலங்களை ஆண்டாண்டு காலமாக, ஏராளமானோர் ஆக்கிரமித்து அனுபவித்து
வருகின்றனர்.
அவற்றை மீட்பதில் கவனம் செலுத்தாமல், கோவில்களில்
நடைபெறும் முறைகேடுகளை தடுக்க முற்படாமல், சிதம்பரம் கோவில் தீட்சிதர்களை
சீண்டி, அவர்களை துன்புறுத்துவது சரியல்ல.
இந்த விஷயத்தில்,
வீரமணியின் சீடர்களான கறுப்புச் சட்டைகளின், அர்த்தமற்ற புகார்களுக்கு
மதிப்பு அளிக்காமல், நேர்மையான வகையில் தி.மு.க., அரசு செயல்பட வேண்டும்.
இல்லையெனில், கோடிக்கணக்கான சிவ பக்தர்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.