சேதுக்கரை, : சேதுக்கரை ஊராட்சியில் உள்ள ராஜீவ் நகர் காலனியில் சேதமடைந்த நிலையில் உள்ள அரசு தொகுப்பு வீடுகளில் மக்கள் வசிக்கும் நிலையில், எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே திறந்த வெளியில் துாங்குகின்றனர்.
கடந்த 1995இல் இந்திராகாந்தி நினைவு குடியிருப்பு திட்டத்தில் 1995ல் சேதுக்கரையில் 9 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டது. தற்போது 9 வீடுகளிலும் அச்சத்துடன் மக்கள் வசிக்கின்றனர். மழை காலங்களில் சேதமடைந்த வீட்டில் தங்குவதற்கு அச்சப்பட்டு திறந்த வெளியில் துாங்குகின்றனர்.
சேதமடைந்த வீட்டில் வசிக்கும் ராஜம்மாள் கூறுகையில், தொகுப்பு வீடுகள் 15 ஆண்டுகளுக்கு முன்பே சேதமடைந்தாலும் வேறு வழியின்றி வசிக்கிறோம். பெரும்பாலான வீடுகளின் கூரை பூச்சுக்கள் முற்றிலும் பெயர்ந்து விழுகிறது. காலனியில் தெரு விளக்குகள் எரிவதில்லை.
வீட்டில் இருக்கும் போது சிமென்ட் பூச்சு கட்டிகள் தலையில் விழுந்து காயத்தை ஏற்படுத்துகிறது. மழை காலங்களில் வீட்டில் தங்குவதற்கு அச்சமாக இருப்பதால் திறந்த வெளியிலும் அருகில் குடிசை அமைத்தும் பாதுகாப்பின்றி வசிக்கிறோம்.
திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் மனு கொடுத்தும் பலனில்லை. எங்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும். எனவே சேதம் அடைந்த வீடுகளை இடித்து விட்டு பிரதமரின் இலவச தொகுப்பு வீடுகள் கட்டத்தர வேண்டும், என்றார்.