முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஒன்றியம் வளநாடு பகுதி கிராமங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறுசேமிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் உண்டியல் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மட்டியரேந்தல், வளநாடு, பொன்னக்கனேரி, புஷ்பவனம், பொக்கனாரேந்தல் கிராமங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 180 பேருக்கு ஒன்றிய கவுன்சிலர் அர்ஜூனன் உண்டியல் வழங்கினார். சிறுசேமிப்பு பழக்கத்தை பள்ளி பருவத்தில் இருந்து கடை பிடிக்க வேண்டும்.
தற்போது ராமநாதபுரத்தில் அரசு சார்பில் புத்தக கண்காட்சி நடக்க உள்ளது. மாணவர்கள் பணத்தை சேமித்து கண்காட்சியில் பயனுள்ள புத்தகத்தை வாங்கவும், படிப்பிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தலாம்.
எனவே சிறுசேமிப்பு பழக்கத்தை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.