புழல் :மத்திய சிறையில் வழங்கப்படும் கோழி இறைச்சிக்காக, வெளிநாட்டு பெண் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற, பெண் காவலர் காயமடைந்தார்.
சென்னை புழல் மத்திய சிறை, மூன்றடுக்கு பாதுகாப்பு வசதியை கொண்டது. சிறை வளாகத்தில், விசாரணை, தண்டனை கைதிகள் சிறை, மகளிர் சிறை, பயங்கரவாதிகளுக்கான உயர் பாதுகாப்பு சிறை ஆகியவை உள்ளன. அவற்றில், 2,500 கைதிகள் அடைக்கப்படுவர்.
மகளிர் சிறையில், விசாரணை மற்றும் தண்டனை பெற்ற வெளிநாட்டு பெண் கைதிகள் உட்பட, 210 பேர் அடைக்கப்பட்டிருந்தனர்.
சிறையில் உள்ள கைதிகளுக்கு, மதிய உணவுடன், வார இறுதி நாளான ஞாயிறன்று, 100 கிராம் கோழி இறைச்சி வழங்கப்படுகிறது.
நேற்று முன்தினம் மதியம், உணவு வேளையின் போது, கோழி இறைச்சியை கூடுதலாக பெறுவதில், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான, நைஜீரியாவை சேர்ந்த மோனிகா, 31, தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த சீனோதாண்டா, 33, ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலானது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் கோமளா, 46, அவர்களை தடுக்க முயன்றார்.ஆனால், அவர்களால் கீழே தள்ளிவிடப்பட்டார். அதனால், காயமடைந்த அவர், ஸ்டான்லி மருத்துவமனையில், புற நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இது குறித்து, சிறை அலுவலர், புழல் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.