புதுடில்லி :உலக பிரசித்தி பெற்ற தாஜ் மஹாலின் கட்டுமானம் குறித்து வரலாற்றில் இடம் பெற்றுள்ள தவறான தகவல்களை நீக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால், உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ளது. இதை உலக பாரம்பரிய சின்னமாக, 'யுனெஸ்கோ' எனப்படும், ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு அறிவித்தது.
இந்நிலையில், தாஜ் மஹாலின் கட்டுமானம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பி, சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதன் விபரம்:உலக அளவில் பிரசித்தி பெற்ற தாஜ் மஹாலை வடிவமைத்த கட்டடக் கலை நிபுணர் குறித்து எந்த குறிப்புமே இல்லாதது என்னை வியப்பில் ஆழ்த்தியது. எனவே, அது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். அப்போது பல உண்மைகள் தெரியவந்தது.
![]()
|
ராஜா மான் சிங் வசித்து வந்த அரண்மனையைத் தான் முகலாய பேரரசர் ஷாஜஹான் கைப்பற்றி அதில் சில மாற்றங்களை செய்து அங்கு தன் மனைவி மும்தாஜின் உடலை அடக்கம் செய்துள்ளார். இதனால் தான் அந்த மாளிகையை வடிவமைத்தவர் குறித்த தரவுகள் இல்லை.
எனவே, தாஜ் மஹாலின் கட்டுமானம் குறித்து வரலாற்றில் பதிவாகி உள்ள தவறான தகவல்ளை நீக்க உத்தரவிட வேண்டும்.
மேலும், தாஜ் மஹால் கட்டப்பட்டு உண்மையில் எத்தனை ஆண்டுகள் ஆனது என்பதை விசாரிக்க தொல்லியல் ஆய்வுத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ''வரலாற்றை மாற்றி எழுதுவது நீதிமன்றத்தின் வேலை இல்லை. இது தொடர்பாக, மனுதாரர் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையை அணுகலாம். இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே தள்ளுபடி செய்யப்படுகிறது,'' என, உத்தரவிட்டனர்.