தொண்டாமுத்துார்: ''உலகளவில் ஒவ்வொரு, 5 வினாடியும் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவிற்கு வளமான மண்ணை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்,'' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பேசினார்.
சர்வதேச மண் தினத்தையொட்டி 'மண் காப்போம்' இயக்கம் சார்பில் பெங்களூரில் நேற்று மண் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு 'ஸ்கோர் பார் சாயில்' என்ற உலகளாவிய விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தற்போது நடந்து வரும் நிலையில், பொதுமக்கள் தங்களுடைய சிறந்த கால்பந்தாட்ட வீடியோவை, 'ஸ்கோர் பார் சாயில்' என்ற ஹாஸ்டேக்கை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு, மண்வள பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என, அப்போது தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியதாவது: கடந்த, 25 ஆண்டுகளில் மட்டும் உலகின் மண்வளத்தை, 10 சதவீதம் இழந்து விட்டோம். எனவே, மண் அழிவை தடுத்து, இழந்த மண்வளத்தை மீட்டெடுக்க நாம் 'மண் காப்போம்' இயக்கத்தை கடந்த மார்ச் மாதம் துவங்கினோம். அதன்பிறகு, மண் தொடர்பான பார்வை மாறியுள்ளது.
உலகளவில் ஒவ்வொரு, 5 வினாடியும், ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவிற்கு வளமான மண்ணை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். வளமான நிலம் பாலைவனமாகி கொண்டிருக்கிறது. கடந்தாண்டு ஸ்காட்லாந்து நாட்டில் நடந்த, 26வது பருவநிலை மாற்றத்துக்கான கட்டமைப்பு மாநாட்டில் மண் குறித்து யாரும் பேசவில்லை.

ஆனால், 'மண் காப்போம்' இயக்கத்தின் பிரசாரத்தால் இந்த ஆண்டு எகிப்தில் நடந்த, 27வது பருவநிலை மாற்றத்துக்கான கட்டமைப்பு மாநாட்டில், மண்வளம் குறித்த முக்கிய கலந்துரையாடல் நிகழ்ந்துள்ளது. மண்வள மீட்டெடுப்பு கொள்கைகள் உலகளவில் கட்டாயம் உருவாக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதை வேகப்படுத்த அனைவரும் பல்வேறு வழிகளில் மண் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.