ராஜ்கோட்: குஜராத்தில் 100 பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்த மல்யுத்த வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தில், ராஜ்கோட்டில் உள்ள பூங்கா அருகே மர்ம நபர் ஒருவர் தன்னிடம் பாலியல் சேட்டை செய்ததாக, ஆசிரியை ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த கவுஷல் பிபாலியா, 24, என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திடுக்கிடும் தகவல் வெளியானது. இது குறித்து போலீசார் கூறியதாவது:
பிபாலியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் 100க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். தன் ஆடைகளை கழற்றி, பெண்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக தொல்லை தந்து இன்பம் அடைந்துள்ளார். குறிப்பாக சாலையில் செல்லும் பெண்களின் பின்பக்கத்தை தாக்கிவிட்டு தப்பியுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட பெண்கள் அவமானம் கருதி புகார் தரவில்லை. இவ்வாறு போலீசார் கூறினர்.
கைது செய்யப்பட்ட கவுஷல் பிபாலியா, 2016 முதல் 2019-ம் ஆண்டு வரை மாநில அளவில் நடைபெற்ற மல்யுத்த போட்டிகளில், 74 கிலோ பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
'டியூஷன்' வந்த சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியர்
பலியா: உத்தர பிரதேசத்தில் பலியா மாவட்டத்தின் பைரியா பகுதியில் வசிப்பவர் நிதேஷ் குமார். இவர் தன்னிடம் டியூஷன் படிக்க வந்த 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, வெளியே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த தகவலையடுத்து, அவரது தாய் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, டியூஷன் ஆசிரியர் நிதேஷ் குமாரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஆள் கடத்தல் மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடந்து வருகிறது.
தமிழக நிகழ்வுகள்:
வெளிநாட்டு பெண் கைதிகள் ‛சிக்கனுக்காக' சிறையில் மோதல்
சென்னை: மத்திய சிறையில் வழங்கப்படும், கோழி இறைச்சிக்காக, வெளிநாட்டு பெண் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற, பெண் காவலர் காயமடைந்தார்.
சென்னை புழல் மத்திய சிறை, மூன்றடுக்கு பாதுகாப்பு வசதியை கொண்டது. சிறை வளாகத்தில், விசாரணை, தண்டனை கைதிகள் சிறை, மகளிர் சிறை, பயங்கரவாதிகளுக்கான உயர் பாதுகாப்பு சிறை ஆகியவவை உள்ளன. அவற்றில், 2,500 கைதிகள் அடைக்கப்படுவர்.மகளிர் சிறையில், விசாரணை மற்றும் தண்டனை பெற்ற வெளிநாட்டு பெண் கைதிகள் உட்பட, 210 பேர் அடைக்கப்பட்டிருந்தனர்.
சிறையில் உள்ள கைதிகளுக்கு, மதிய உணவுடன், வார இறுதி நாளான ஞாயிறன்று, 100 கிராம் கோழி இறைச்சி வழங்கப்படுகிறது. நேற்று முன் தினம் மதியம், உணவு வேளையின் போது, கோழி இறைச்சியை கூடுதலாக பெறுவதில், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான, நைஜீரியாவை சேர்ந்த மோனிகா, 31, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சீனோதாண்டா, 33 ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலானது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் கோமளா, 46 அவர்களை தடுக்கமுயன்றார். ஆனால், அவர்களால் கீழே தள்ளிவிடப்பட்டார். அதனால், காயமடைந்த அவர், ஸ்டான்லி மருத்துவமனையில், புற நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து, சிறை அலுவலர், புழல் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
கள்ளழகர் கோயில் நிலத்தை விற்க முயன்றவர் கைது
விருதுநகர்: விருதுநகர் சூலக்கரையை சேர்ந்த ரெங்கநாயகி 50, என்பவரிடம் மதுரை கள்ளழகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை மோசடியாக விற்க முயன்ற திண்டுக்கல் சதீஷ்குமாரை 43, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
![]()
|
திண்டுக்கல்லை சேர்ந்த பத்மநாபன், அங்குராஜ், சதீஷ்குமார், குழந்தைச்செல்வம், சுமதி, சந்திரன் ஆகிய 6 பேர் மதுரையில் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதாக கூறி விருதுநகர் சூலக்கரையை சேர்ந்த ரெங்கநாயகியிடம் ரூ.70 லட்சம் முன்பணம் பெற்றனர்.
நிலத்தை பதிவு செய்ய தாமதப்படுத்தி வந்த நிலையில் அந்த நிலம் மதுரை கள்ளழகர் கோயிலுக்கு சொந்தமானது என தெரிந்தது. இதையடுத்து கொடுத்த பணத்தை ரெங்கநாயகி திருப்பிக் கேட்ட போது அவர்கள் தராமல் மோசடி செய்தனர்.
விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பத்மநாபன், அங்குராஜ், சதீஷ்குமார், குழந்தை செல்வம், சுமதி, சந்திரன் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் சதீஷ்குமார் 43, என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்ற 5 பேரையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
எஸ்.ஐ., மீது ஆட்டோ ஏற்றி கொல்ல முயன்றவர் கைது
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே புலிப்பனத்தை சேர்ந்தவர் கருணாகரன் 57. திருவட்டார் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., நேற்று முன்தினம் பணி முடிந்து சாமியார்மடத்தில் கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டு பைக்கில் வீட்டுக்கு புறப்பட்ட போது ஒரு ஆட்டோவில் மூன்று பேர் மது அருந்தி கொண்டிருந்தனர்.
அதை பார்த்த கருணாகரன் பைக் மீது ஆட்டோவால் மோதி கீழே தள்ளி விட்டனர். பின் மூன்று பேரும் கருணாகரனை அரிவாளால் வெட்ட முயன்றனர். படுகாயமடைந்த கருணாகரன் தக்கலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாகரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தக்கலை போலீசார் ஆட்டோ டிரைவர் காட்டாத்துறையை சேர்ந்த ராஜேஷ் 34, என்பவரை கைது செய்தனர். மற்ற இரண்டு பேரை தேடுகின்றனர்.
40 நாய்களை கொன்ற ஊராட்சி தலைவி மீது வழக்கு
விருதுநகர்: விருதுநகர் ஓ. சங்கரலிங்காபுரம் கிராமத்தில் உள்ள வீடுகள், தெருக்களில் வளரும் 40க்கும் மேற்பட்ட நாய்களை ஆட்களை வைத்து கொன்ற ஊராட்சி தலைவி நாகலட்சுமி, அவரது கணவர் மீனாட்சி சுந்தரம் மீது ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கிராமத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஊராட்சி தலைவி நாகலட்சுமியிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இதையடுத்து டிச.1, 3ல் அவர் வேலையாட்களை வைத்து கணவர் மீனாட்சிசுந்தரம் துணையுடன் நாய்களை கொன்றார். இதனை அப்பகுதியில் வசிக்கும் நபர் அலைபேசியில் வீடியோ எடுத்து குமாரபுரத்தை சேர்ந்த விலங்கு நல ஆர்வலர் சுனிதா 39,வுக்கு அனுப்பினார்.
அவர் இது குறித்து மீனாட்சிசுந்தரத்திடம் கேட்ட போது 40க்கும் மேற்பட்ட நாய்களை ஆட்களை வைத்து கொன்றதாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து நாகலட்சுமி, மீனாட்சிசுந்தரம் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.