கோவை: 'அரசியல் பிடியில்இருந்து, பல்கலைகளை காப்பாற்ற வேண்டும்' என, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி.,யின் தலைவர் ஜகதீஷ்குமாருக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்:
பல்கலை துணைவேந்தர்கள் தேர்வு, நியமனத்தில் நாடு இன்று பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறது. துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசு, கவர்னர் இடையே பூசல் நிலவுகிறது.
கேரளாவில், கவர்னரின் வேந்தர் பொறுப்பை ரத்து செய்து, அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
அப்பட்டம்
மாநில முதல்வரே, பல்கலை வேந்தராக பொறுப்பு வகிக்கும் சட்ட முன்வடிவை தமிழக, மேற்கு வங்க அரசுகள் சட்டசபையில் நிறைவேற்றியுள்ளன. பல மாநிலங்களும், வேந்தருக்கான அதிகாரத்தை, கவர்னரிடம் இருந்து பறிக்கும் வழிகளை ஆராய்ந்து வருகின்றன.
இது, கவர்னரை கலந்து ஆலோசிக்காமல், துணை வேந்தர்களை நியமிக்கவும், பல்கலைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், மாநில அரசுகள் விரும்புவதை காட்டுகிறது.
மேலும், பல்கலை செயல்பாடுகளில் அரசியல் தலையீட்டை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
துணைவேந்தர்கள் நியமனத்தில் ஊழல், வேண்டியவர்களுக்கு சலுகை, அரசியல் செல்வாக்கு ஆகியவற்றுக்கு இது வழிவகுக்கும்.
ஊழல் பரவல்
தமிழகத்தில் அமைச்சர்களின் உறவினர்கள், அரசியல் கட்சியைச் சார்ந்த விரிவுரையாளர்கள், துணை பேராசிரியர்கள் ஆகியோர் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
துணைவேந்தர் நியமனத்தில் ஜாதி, பணம் ஆகியவற்றின் தலையீடும் இருந்து உள்ளது.
நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் இந்த நடைமுறையும், ஊழலும் பரவலாகி விட்டது.
ஓட்டு வங்கி அரசியலுக்காக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பா.ஜ., ஆட்சியில் இல்லாத பெரும்பாலான மாநிலங்களில், பல்கலைகள் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் துணைவேந்தர்களின் நியமனத்தை பொறுத்தவரை உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களும் முரண்பட்ட தீர்ப்புகளையே வழங்கிஉள்ளன.
இணைவு அதிகாரம்
யு.ஜி.சி., விதிமுறைகள், பல்கலைகளின் சட்ட விதிகளுக்கும் மேலானவை என்பதில், நீதிமன்றங்களே தெளிவின்றி இருப்பது வியப்பாக உள்ளது.
நாட்டில் உள்ள பல்கலை, கல்வியின் தரத்தை காக்க, யு.ஜி.சி., தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து, பல்கலையை காக்க வேண்டும்.
துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்கும் குழு அமைப்பது முதல், அனைத்து நடைமுறைகளுக்கும், உறுதியான விதிகளை கொண்டு வரவேண்டும்.
ஒவ்வொரு பல்கலையின் விதிகளிலும் இதை இடம்பெறச் செய்ய வேண்டும். பல்கலைகளுக்கு இணைவு அதிகாரம், பட்டங்கள், கல்விகளுக்கான அங்கீகாரம் வழங்கும்போது இதை கட்டாயமாக்க வேண்டும்.
பல்கலைகளில் சிண்டி கேட், செனட், கல்விக் குழு அமைப்பதற்கான வரையறைகளை யு.ஜி.சி., வகுக்க வேண்டும்.
சரியான நேரம்
உலகம் முழுதும் பல்கலைகள், பல்வேறு துறைகளில் சாதிக்க போட்டியிடுகின்றன. ஆனால், இந்தியப் பல்கலைகள் சட்ட வழக்குகள், அரசியல்வாதிகளின் அழுத்தங்களில் சிக்கித் தவிக்கின்றன.
பல்கலைகளின் தன்னாட்சி அதிகாரத்தை உறுதி செய்ய, சில நடவடிக்கைகளை யு.ஜி.சி., மேற்கொள்வதற்கு இது சரியான நேரம்.
அதன் மூலம் தேசிய கல்விக் கொள்கையில் எதிர்பார்க்கப்படும் நாட்டின் உயர்கல்வியின் தரம் உறுதி செய்யப்படும்.
இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
உலகம் முழுதும் பல்கலைகள், பல்வேறு துறைகளில் சாதிக்க போட்டியிடுகின்றன. ஆனால், இந்தியப் பல்கலைகள் சட்ட வழக்குகள், அரசியல்வாதிகளின் அழுத்தங்களில் சிக்கித் தவிக்கின்றன. பல்கலைகளின் தன்னாட்சி அதிகாரத்தை உறுதி செய்ய, சில நடவடிக்கைகளை யு.ஜி.சி., மேற்கொள்வதற்கு இது சரியான நேரம். அதன் மூலம் தேசிய கல்விக் கொள்கையில் எதிர்பார்க்கப்படும் நாட்டின் உயர்கல்வியின் தரம் உறுதி செய்யப்படும்.