புதுடில்லி : பல்வேறு, 'டிவி சேனல்'கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், குஜராத்தில் பா.ஜ., அதிகப் பெரும்பான்மையில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.
ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 12ல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. குஜராத் சட்டசபைக்கான தேர்தல் கடந்த 1 மற்றும் நேற்று இரு கட்டங்களாக நடந்து முடிந்தன.
இந்த இரு மாநிலங்களில் பதிவான ஓட்டுகள் நாளை மறுநாள் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகின்றன.
'டிவி சேனல்'கள்
ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், வெற்றி யார் வசம் என்பது தொடர்பாக பல்வேறு, 'டிவி சேனல்'கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இதில், குஜராத்தில் அதிகப் பெரும்பான்மையுடன் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் என, பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கு அடுத்தபடியாக காங்.,கும், மூன்றாவது இடத்தில் ஆம் ஆத்மியும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.ஹிமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை, மிக சிறிய வித்தியாசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என, சில ஊடகங்களும், மிக சிறிய வித்தியாசத்தில் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் என சில ஊடகங்களும் கருத்து வெளியிட்டுள்ளன.
எனவே, அங்கு வெற்றி பெறும் கட்சி மிக சொற்ப எண்ணிக்கையிலான தொகுதிகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை பெறும் என்பது தெளிவாகிறது.
புதுடில்லி மாநகராட்சியில் உள்ள 250 வார்டுகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில் 50 சதவீத ஓட்டுகள் பதிவாகின. ஓட்டுகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள்
வெளியாக உள்ளன.
![]()
|
பெரும்பான்மை
இது தொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவில், ஆம் ஆத்மி அதிகப் பெரும்பான்மையுடன் மாநகராட்சியை கைப்பற்றும் என, கூறப்படுகிறது.
ஆம் ஆத்மி, 149 - 171 வார்டுகளையும், பா.ஜ., 69 - 91 வார்டுகளையும், காங்., 37 வார்டுகளையும் பிடிக்கும் என, முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன் வாயிலாக, 15 ஆண்டுகளாக பா.ஜ.,வின் பிடியில் உள்ள புதுடில்லி மாநகராட்சி, ஆம் ஆத்மி வசம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.