புதுடில்லி :புதுடில்லியில் நிர்வாக அதிகாரம் யாருக்கு என்பது குறித்த வழக்கை, அதிக நீதிபதிகள் அமர்வு விசாரிக்க உத்தரவிடக் கோரி, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, நிர்வாக அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதா, மாநில அரசுக்கு உள்ளதா என்பதில், இரு தரப்புக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
![]()
|
இந்த வழக்கை, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த, நவ., ௧௧ல் நடந்த விசாரணையின்போது, 'இந்த வழக்கில் அரசியல் சாசனம் குறித்த விவகாரத்தை மட்டுமே விசாரிப்போம்; அரசியல் விவகாரங்களை விசாரிக்கப் போவது இல்லை' என, உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வருவதாக இருந்தது. இந்நிலையில், மத்திய அரசு சார்பில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
'இந்த வழக்கை, அதிக நீதிபதிகள் உள்ள அமர்வின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறிப்பிட்டார்.
இதற்கு புதுடில்லி அரசு சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கின் விசாரணையை நீட்டிக்கவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் வாதிட்டார்.
இதையடுத்து, ''இந்த புதிய மனுவை ஏற்பது குறித்து அரசியல் சாசன அமர்வு முடிவு செய்யும்,'' என, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறிப்பிட்டார்.இந்த அமர்வில் உள்ள நீதிபதி கிருஷ்ண முராரிக்கு உடல்நிலை சரியில்லாததால், இன்று விசாரணை நடப்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement