புதுடில்லி:'கட்டாய மத மாற்றம் மிகத் தீவிரமான பிரச்னை; மேலும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது' என, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய், கட்டாய மத மாற்றத்தை தடுப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
![]()
|
மோசமான விளைவுகள்
இதில் கூறப்பட்டு உள்ளதாவது:
நாட்டின் பல பகுதிகளிலும் கட்டாய மத மாற்றம் நடக்கிறது. துாண்டுதல், ஏமாற்றுதல், அச்சுறுத்தல் ஆகியவற்றின் வாயிலாக மத மாற்றங்கள் நடக்கின்றன. மேலும், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்தும் கட்டாய மத மாற்றம் நடக்கிறது.
இதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 'கட்டாய மத மாற்றம் மிகவும் தீவிரமான பிரச்னை.
'இதை தடுக்க, மத்திய அரசு மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையெனில் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்' என, உச்ச நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டிருந்தது.கட்டாய மதமாற்றத்தை தடுக்க, மத்திய அரசின் திட்டம் குறித்து தெரிவிக்கும்படியும் அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிகுமார் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தகவல்கள் சேகரிப்பு
அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'மாநிலங்களிடம் இருந்து தகவல்கள் சேகரித்து வருகிறோம். மேலும் அவகாசம் வேண்டும்' என குறிப்பிட்டார்.இதைத் தொடர்ந்து, 'கட்டாய மத மாற்றம் என்பது மிகவும் தீவிரமான பிரச்னை. மேலும் இது நம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது' என, அமர்வு குறிப்பிட்டு உள்ளது.
வழக்கின் விசாரணை,12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த மதத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ தாகுர் அனுகுல் சந்திராவை, பரமாத்மாவாக அறிவிக்கக் கோரி, உபேந்திர நாத் தலாய் என்பவர் பொதுநலன் வழக்கு தொடர்ந்திருந்தார்.இதை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிகுமார் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. தங்களுக்கு விருப்பமான மதத்தை பின்பற்ற அனைவருக்கும் உரிமை உள்ளது. நீங்கள் வேண்டுமானால், அவரை பரமாத்மா என்று அழைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களும் அதை பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப் படுத்தி எப்படி உத்தரவிட முடியும்?விளம்பரத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால், மனுதாரருக்கு ௧ லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.