வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''புதிய கல்வி கொள்கை, நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும்,'' என, கவர்னர் ரவி தெரிவித்தார்.
சென்னை மந்தைவெளியில் இயங்கி வரும், 'தி நேஷனல் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் எஜூகேஷனல் சொசைட்டி'யில், பள்ளி மாணவர்களின் பன்முகத்தன்மையை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, 'ராதா சுவாமி' சிறப்பு மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.
இந்த மையத்தையும், ராதா சுவாமியின் உருவ படத்தையும், கவர்னர் ரவி திறந்து வைத்தார். முன்னதாக, சொசைட்டி தலைவர் ஸ்ரீனிவாசன் சுவாமி, பள்ளிகளின் சாதனைகள், திட்டப் பணிகள் குறித்து விரிவாக பேசினார்.
மொத்தம், நான்கு மாடியுடன் அமைந்துள்ள இந்த மையத்தில், மாணவர்கள் உடல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் மேம்படுத்திக் கொள்ள, பல்வேறு வசதிகள் இடம் பெற்று உள்ளன.
![]()
|
விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:
தற்போதுள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தங்களை மேம்படுத்தி கொள்ளும் வகையில், பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன.
யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழுவின் புள்ளி விபரப்படி, கல்லுாரி செல்லும் மொத்த மாணவர்களில், 70 சதவீதம் பேர் கலை பிரிவு சார்ந்த படிப்புகளில் படிக்கின்றனர்.
தமிழகத்திலும் அதிக மாணவர்கள் கலை சார்ந்த படிப்புகளையே படிக்கின்றனர்.
ஆனால், இதற்கான வேலை வாய்ப்புகள் இருக்கிறதா என்பது கேள்வியாக இருக்கிறது.
அனைத்து படிப்புகளும் நல்லது தான். ஆனால், உலக நாடுகள் அறிவியல் தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வருகின்றன.
நம் நாட்டில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து வளர வேண்டும். புதிய கல்வி கொள்கை, நமக்கான கல்வி கொள்கையாக, பல்வேறு சிறப்பு அம்சங்களுடன்உருவாக்கப்பட்டு உள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும். நாட்டு பற்றை வளர்க்கவும், நமக்கான அறிவியல் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், தி நேஷனல் பாய்ஸ் அண்டு கேர்ள்ஸ் எஜூகேஷனல்சொசைட்டி இணை செயலர் ஸ்ரீதரன், துணைத் தலைவர் குப்புசாமி, கவுரவ செயலர் வச்சலா நாராயணசுவாமி, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்படபலரும் பங்கேற்றனர்.