வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
என்.பரசுராமன், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இந்தாண்டு ஜூலை மாதம், சென்னையில் நடைபெற்ற, 'செஸ் ஒலிம்பியாட்' போட்டியை துவக்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி வந்த போது, அவருக்கு அளித்த பாதுகாப்பில், தமிழக அரசு பெரிய குளறுபடி செய்தது' என்று, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு தர்க்க ரீதியாக பதில் தர முடியாத முதல்வர் ஸ்டாலின், 'மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க சிலர் சதி செய்கின்றனர். மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை; ஆபத்பாந்தவனாக, தி.மு.க., ஆட்சி உள்ளது' என்று புலம்பியுள்ளார்.
'சட்டம் - -ஒழுங்கை சீர்குலைக்க, சிலர் சதி செய்கின்றனர்' என்றால், அந்தச் சதிகாரர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே, மாநில முதல்வரின் கடமை. அந்த இடத்தில் தானே, அவர் அமர்ந்திருக்கிறார். பொறுப்பான பதவியில் இருப்பவர் நடவடிக்கை எடுக்காமல், புலம்புவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?
![]()
|
'முதல்வர் புலம்பியபடியே இருக்கட்டும்; நாங்கள், எங்கள் காரியத்திலே கண்ணாக இருக்கிறோம்' என்றல்லவா,உடன்பிறப்புகள் நடந்து கொண்டிருக்கின்றனர். அதனால் தான் இப்போது, பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் நடந்த குளறுபடிகள் குறித்து, கவர்னரிடம் புகார் கொடுக்கும் அளவுக்கு, நிலைமை விபரீதமாகி இருக்கிறது.
பொறுப்புடன் நடந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டியகாவல் துறை, தன் கரங்களை தானே கட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறதா அல்லது யாராவது கட்டிப் போட்டு வைத்திருக்கின்றனரா என்று தெரியவில்லை.
பாதுகாப்பு குளறுபடிகளால் தான், முன்னாள் பிரதமர் ராஜிவ், நம் தமிழ் மண்ணில், ஸ்ரீபெரும்புதுாரில், மனித வெடிகுண்டால் குறி வைத்து தாக்கப்பட்டு உயிரிழந்தார்; அப்போது நடைபெற்றதும் இதே தி.மு.க., ஆட்சி தான்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி செய்து, மீண்டும் ஒரு பயங்கரவாத செயல் நிகழ வழி வகுத்திருக்கிறது கழக ஆட்சி. ஆனால், சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க, சிலர் சதி செய்வதாக கதை அளந்து கொண்டு இருக்கிறார் முதல்வர்.
ராஜிவ் படுகொலை நிகழ, அப்போதையதி.மு.க., ஆட்சியில் நிலவிய, சட்டம் - ஒழுங்கு குளறுபடிகளே காரணம். அந்த படுபாதக செயலுக்கு, மக்கள் பாவமன்னிப்பு அளித்ததால் தான், தி.மு.க., மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர முடிந்தது. இனியும் ஒரு துயர சம்பவம் தமிழ் மண்ணில் நிகழ்ந்தால், அதற்கு பாவ மன்னிப்பே கிடைக்காது முதல்வரே!