சென்னை: 'தமிழகத்தின் சுற்றுப்புறச் சூழலை அழிக்கும், கேரள அரசை கண்டிப்பதோடு, கடமை தவறும் அனைத்து தமிழக அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
கேரள மாநிலத்தில் இருந்து, மருத்துவ, மின்னணு கழிவுகளை, லாரிகளில் எடுத்து வந்து, தமிழகத்தின் எல்லையோர கிராமங்களில், குறிப்பாக நீர் நிலைகளில் கொட்டி வருகின்றனர்.
வேடிக்கை
கேரளாவின் குப்பை தொட்டியாக, தமிழகத்தை மாற்றி வருகிறது. சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிப்பதோடு, தமிழர்களின் உயிரோடு, கேரள கம்யூ., அரசு விளையாடுகிறது. இந்த ஆபத்தான விளையாட்டை, தமிழக அரசும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது.
கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்கள் வழியே தான், இந்தக் கழிவுகள் தமிழகத்திற்கு வருகிறது.
இந்த மாவட்ட எல்லைகளில், சோதனைச் சாவடிகளில் உள்ள அதிகாரிகள், கண்டும் காணாமல் இருப்பது தான், பிரச்னையின் துவக்கம்.
நடவடிக்கை
இந்தக் கழிவுகள் குறித்து, உள்ளாட்சி பிரதிநிதிகள் குரல் எழுப்பாததற்கு ஊழல் தான் காரணம்.
ஒட்டுமொத்த அரசு இயந்திரமே, இந்த முறைகேடில் பங்கு பெற்றுள்ளது. இனியும் அமைதி காக்காமல், தமிழகத்தின் சுற்றுப்புறச் சூழலை அழிக்கும், கேரள அரசை கண்டிப்பதோடு, கடமை தவறும் அனைத்து தமிழக அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது, தமிழக அரசின் கடமை.
இவ்வாறு நாராயணன் திருப்பதி தெரிவித்து உள்ளார்.