வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் பெண் சோப்தாராக (நீதிபதிகள் முன் செங்கோல் ஏந்திச் செல்லும் உதவியாளர்) லலிதா நியமிக்கப்பட்டுள்ளார்.
அறையிலிருந்து (சேம்பர்) விசாரணை நடைபெறும் நீதிமன்ற அறைக்கு செல்லும் போது, காரில் ஏறச் செல்லும் போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் வருவதை மக்களுக்கு உணர்த்தும் விதமாக 'சோப்தார்' எனப்படும் வெள்ளை நிற சீருடை, சிவப்பு நிற தலைப்பாகை அணிந்த உதவியாளர்கள் செங்கோல் ஏந்தியபடி சமிக்ஞை கொடுத்துக்கொண்டே முன்னே செல்வர்.
இவர்கள் நீதிபதிகளுக்கு தேவைப்படும் சட்டப் புத்தகங்கள், வழக்கு தொடர்பான கோப்புகளை எடுத்து தர உதவுவர். ஆண்கள் மட்டுமே இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல் பெண் 'சோப்தாராக' திலானி என்பவர் நியமிக்கப்பட்டார்.
தற்போது உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் முதன் முதலாக பெண் சோப்தார் பணியில் லலிதா நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி என்.மாலாவிடம் லலிதா பணிபுரிகிறார். இவர் மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவர். எம்.சி.ஏ., பட்டதாரி. லலிதா கூறுகையில், ''இப்பணியில் சேர்ந்தது பெருமையளிக்கிறது,'' என்றார்.
இப்பணிக்கு கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு. உயர்நீதிமன்ற பணியாளர் தேர்வுக்குழு மூலம் தேர்வு நடைமுறைகளை பின்பற்றி லலிதா உட்பட 3 பெண்கள் சோப்தாராக உயர்நீதிமன்றக் கிளையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.