மதுரை: ஆக்கிரமிப்பிலிருந்து நீர்நிலைகளை பாதுகாத்தல், பராமரிப்பது, இயற்கை வளங்களின் அறங்காவலர்களான அரசு அதிகாரிகளின் கடமை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தளவாய்பாளையம் கலைசெல்வன் தாக்கல் செய்த மனு:
தளவாய்பாளையத்தில் குறிப்பிட்ட சர்வே எண்களில் உள்ள நிலம் புது ஏரி பாய்ச்சல் ஆதாரம் என வருவாய்த்துறை ஆவணங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது விவசாயத்திற்கான நீராதாரமாக இருந்தது. சாலை, மின் நிலையம் அமைத்தல் உட்பட அரசின் பல்வேறு பயன்பாட்டிற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது.
![]()
|
நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு:
நிலம் அரசுக்குத் தேவை. தனிநபருக்கு பட்டா வழங்க முடியாது எனக்கூறி வருவாய் ஆய்வாளரின் அறிவிப்பை பாபநாசம் தாசில்தார் மற்றும் உதவி கலெக்டர் ரத்து செய்துள்ளனர். வருவாய்த்துறை ஆவணங்களை சரிபார்க்காமல் வருவாய் ஆய்வாளர் அறிவிப்பு வெளியிட்டதை புறந்தள்ள முடியாது.
ஆக்கிரமிப்புகளிலிருந்து நீர்நிலைகளை பாதுகாத்தல், பராமரிப்பது, இயற்கை வளங்களின் அறங்காவலர்களான அரசு அதிகாரிகளின் கடமை. பாதுகாக்க அரசு தவறினால், மக்கள் நம்பிக்கை இழப்பர்.
இவ்வழக்கில் நீர்நிலை என வகைப்படுத்தப்பட்ட நிலத்திற்கு சரியாக விசாரிக்காமல் பட்டா வழங்க முயற்சிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் ஆட்சேபனை கோர அறிவிப்பு வெளியிட காரணமாக இருந்த சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விசாரணை நடத்தி, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.